நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்த மத்திய அரசு அடுத்த கூட்டத் தொடர் முன்கூட்டியே நடைபெறும் என தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 8 நாட்கள் மட்டுமே நடந்த நிலையில், எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. வழக்கமாக குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் மாதம் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ ஆரம்பிக்கும். எனினும் கொரோனா பரவல் டெல்லியில் அதிகரித்ததால் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் முதல் வாரம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதி ரஞ்சன் சவுத்ரி, விவசாயிகள் போராட்டம், கொரோனா சூழ்நிலை, பொருளாதாரம் பற்றி விவாதிக்க அவையைக் கூட்ட வேண்டுமென வலியுறுத்தினார்.
இதற்கு பதில் கடிதம் எழுதிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ள காரணத்தால் குளிர்கால கூட்டத் தொடர் ரத்துசெய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். எனினும், அடுத்த கூட்டத் தொடர முன்கூட்டியே நடத்த மத்திய அரசு திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டார். இதன்படி ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் கூட்டத் தொடர் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
read more: 2021 தேர்தல்: தினகரன், சீமான், கமல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு!
இந்தியன் எக்பிரஸுக்கு பேட்டியளித்த பிரகலாத் ஜோஷி, கொரோனா தடுப்பூசி மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத் தொடர் பற்றி மக்களவை கட்சி தலைவர்களுடன் தொடர்புகொண்டு பேசினேன். குளிர்கால அமர்வைத் தவிர்ப்பதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி மக்களவை காங்கிரஸ் தலைவராக இருக்கும் தன்னிடம் விவாதிக்கவில்லை என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார். இதுபோலவே, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத்திடம் விவாதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.