தினத்தந்தியில் வந்த கன்னித்தீவு கதை நகைச்சுவைக்காக பலராலும் எடுத்து கையாளும் உதாரணம். எங்கள் தாத்தா அவரது சின்ன வயதிலிருந்தும்போது கன்னித்தீவு கதையை படித்தார், அதில் வரும் சிந்துபாத் பல துன்பங்களை அனுபவிப்பார்.
தாத்தா, வாலிபனாகி வயோதிகர் ஆன பின்னரும் அந்தக்கதை முடியவில்லை, என் தந்தையும் அவரது சிறுவயது முதல் படித்து வருகிறார் கதை இன்னும் தொடர்கிறது. இப்போது நானும் படித்து வருகிறேன் மூன்றுத் தலைமுறைகளாக கன்னித்தீவு கதையும் தொடர்கிறது. 1960-ல் ஆரம்பித்த கதை இன்றும் தொடர்கிறது. பாவம் சிந்துபாத்தின் பிரச்சினை இன்றுவரை தீரவில்லை.
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ரஜினியின் அரசியல் பிரவேசமும் கன்னித்தீவு சிந்துபாத் கதை போல் நீண்டுக்கொண்டே போகிறது. இன்றுவரை அவர் அரசியலுக்கு வரவில்லை, வருவார், வரமாட்டார். இதை வைத்தே 24 ஆண்டுகளை ஓட்டிவிட்டார். உலகில் இந்த அளவுக்கு தனது ரசிகர்களை எந்த நடிகரும் இத்தனை ஆண்டுகள் நம்பவைத்து இழுத்து வந்திருக்க மாட்டார்கள் .
அல்லது உலகில் எந்த ரசிகனும் இந்த அளவுக்கு தனது தலைவனை இப்படி நம்பியிருக்க மாட்டான். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ரஜினி நடிக்க வந்தது 1980-களில் அப்போது ஒரு 18 வயது பையன் ரஜினி ரசிகராக இருந்திருந்தால் இப்ப அவருக்கு 58 வயது. கவர்ன்மெண்ட் சர்வீஸ் செய்தது போல் ரிட்டையராகிவிட்டார்.
சரி 45 வயதிலிருந்து 55 வயது என வைத்துக்கொள்வோம். இவர்கள் இன்றுவரை தங்கள் தலைவர் அரசியலுக்கு வருவார் என நம்பி இருக்கின்றனர். இது தவிர திராவிட கட்சிகள் இல்லாத கட்சி வேண்டும் என விரும்புகிறவர்களும், பாஜக போன்ற கட்சியில் உள்ளவர்களும் தீவிரமாக ரஜினியை ஆதரிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இன்று வரை கன்னித்தீவு கதை போல் ரஜினியின் அரசியல் பிரவேசம் உள்ளது.
ரஜினிகாந்த் எனும் நடிகர் 82-க்குமேல் சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையுலகில் வலம் வந்தார். அப்போது எம்ஜிஆர் எனும் ஆளுமை இருந்த காலகட்டம், ஜெயலலிதா அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கும் நேரம். ரஜினி போன்றவர்களுக்கெல்லாம் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்த நேரம். அரசியல் குறித்து யாரும் சிந்திக்காத நேரம். காரணம் எம்ஜிஆர் எனும் ஆளுமையும், கருணாநிதி எனும் ஆளுமையும் போட்டியிலிருந்த நேரம்.
84-ல் எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது இருப்பை தக்க வைத்தார் ஜெயலலிதா. 87-ல் எம்ஜிஆர் மறைந்தப் பின்னர் அதிமுக ஜா, ஜெ என பிரிந்ததும் சிவாஜி கணேசன் எனும் மாபெரும் நடிகர் தமிழக முன்னேற்ற கழகம் என கட்சி ஆரம்பித்ததும் 1989 தேர்தலில் ஜெ.அணி 30 இடங்கள், ஜானகி அணி இடங்கள் 35 இடங்களையும், திமுக கூட்டணி 169 இடங்களையும் பெற்றது.
அப்போது ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் ஆட்சி 91-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. 1991-ல் ஒன்றுபட்ட அதிமுக ஜெயலலிதா தலைமையில் வென்றது. அதுவரை ரஜினி எதையும் சிந்திக்கவில்லை. ‘நமக்கு கட்சியும் வேணா ஒரு கொடியும் வேணா’ என பாடிக்கொண்டிருந்தார். 1991-க்குப் பிறகு சகிப்புத்தன்மையில்லாத அரசாக இருந்த அதிமுக அரசு பாட்சா பட வெற்றி விழாவில் ரஜினி பேசிய ‘வெடிகுண்டு கலாச்சாரம் பேச்சால்’ ஜெயலலிதா கோபமடைய ரஜினியை சீண்ட ஆரம்பித்தனர்.
ரஜினியை வைத்து படமெடுத்த ஆர்.எம்.வீரப்பன் பதவி பறிபோனது. சிவாஜிக்கு அளிக்கப்பட்ட செவாலியே விழாவில் சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என பேசினார். இவையெல்லாம் ரஜினி, ஜெயலலிதா மோதலுக்கு வழி வகுத்தது. அதன் பின்னர் வந்த அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் ரஜினி பேசும் வசனங்கள் அனைத்தும் ஆட்சிக்கு எதிரானதாக கருத ஆரம்பித்தனர்.
அப்போதும் ரஜினி அரசியல் பற்றி பேசவில்லை, சிந்திக்கவில்லை காரணம் அவரது நண்பர் சோ கொடுத்த ஆலோசனைதான். 91-96 அதிமுக ஆட்சி கடும் எதிர்ப்பை சம்பாதிக்க, திமுக இரண்டாக உடைந்து மதிமுக உருவான நிலையிலும் திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளை தனதாக்கினார். அவரது ராஜதந்திரம் காங்கிரஸிலிருந்து பிரிந்த மூப்பனாரையும், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் சோவையும் பயன்படுத்தியது.
மூப்பனார் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமாகா உருவாக்க, சோ மூலம் ஜெ.ஆட்சி மீதிருந்த கடும் கோபத்தால் அதிமுகவுக்கு எதிராக ரஜினி தொலைக்காட்சியில் வாய்ஸ் கொடுத்தார். ரஜினியின் முதன் முதல் அரசியல் பிரவேசம் அதுதான். திமுக-தாமாகா, ரஜினி வாய்ஸ் மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்தது. அந்த தேர்தலில் அதிமுக பெற்ற இடங்கள் 4 மட்டுமே. திமுகவில் பெரிய பிளவை ஏற்படுத்திய மதிமுகவும் படுதோல்வியடைந்தது. திமுக என்றுமில்லாத அளவு 173 தொகுதிகளில் தனித்து வென்றது.
இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். ரஜினிக்கு அந்த நேரத்தில் நல்லதொரு வாய்ப்பு அரசியல் கட்சி ஆரம்பிக்க வந்தது என்பார்கள். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்திருந்தாலும் திமுகவுடன் மூப்பனாரின் தமாகா கட்சி போல் கூட்டணியில் சில பத்து இடங்களை வென்றிருக்க முடியும். ஆனால் ரஜினி அப்போது அரசியலில் இறங்கவில்லை. அதற்கு சோ-வின் ஆலோசனையும், திரைத்துறையில் தனக்கிருக்கும் மார்க்கெட்டையும் ஒரு காரணமாக ரஜினி எண்ணியிருக்கலாம்.
ஆனால் இன்றுவரை ரஜினி ஆதரவாளர்கள் சொல்லும் ஒரு விஷயம் அன்று ரஜினி வாய்ஸ் கொடுத்ததால் திமுக கூட்டணி வென்றது என்று. இது பெரிய அபத்தம். காரணம் அன்று அதிமுக ஆட்சியின் மீதிருந்த வெறுப்பு அதை எளிதாக திமுகவுக்கு வாக்காக மாற்றத்தெரிந்த கருணாநிதியின் அரசியல் அறிவுதான் சாதித்தது. ரஜினி இல்லாவிட்டாலும் அதிமுக தோல்வியை தழுவி இருக்கும்.
அதன் பின்னர் ரஜினி பெரிய அளவில் அரசியலுக்குள் குதிக்கவில்லை காரணம் ரஜினி எப்போதும் தனது திரைப்பட லாபத்தை பெரிதும் பார்ப்பார். அதனால் தான் ஒவ்வொரு படம் வெளியாகும் நேரத்திலும் ஏதாவது அரசியல் கருத்துக்களையோ, அரசியல் பிரவேசம் பற்றியோ பேசுவார், படம் வெளியானவுடன் மவுனமாகிவிடுவார் என்பார்கள்.
96 தேர்தல் வெற்றிக்குப்பின் 98 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை. காரணம் 2 ஆண்டுகளில் திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு வந்த சலிப்பும், அதிமுகவின் 5 ஆண்டு அரசியலை மறந்ததும் தான். 1998-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது அது வெளிப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, மதிமுக ஓரணியாகவும், திமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டது.
வழக்கம்போல் 1996-ம் ஆண்டு வெற்றிக்கூட்டணியாம் திமுக-தமாகா கூட்டணிக்கு ரஜினி மீண்டும் வாய்ஸ் கொடுத்தார். ஆனால் மக்கள் ரஜினி வாய்ஸுக்கு செவி சாய்க்காமல் 39 இடங்களில் 30 இடங்களை அதிமுக கூட்டணிக்கு அளித்தார்கள். ரஜினி வாய்ஸ் கொடுத்த திமுக கூட்டணி 9 இடங்களை மட்டுமே வென்றது.
இதன் பின்னர் ரஜினி வாய்ஸ் கொடுக்கவே இல்லை. அரசியல் கட்சி தொடங்காமல் சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்து யாருக்கு ஆதரவு கொடுத்தாலும் அதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது அந்த தேர்தலில் வெளிப்பட்டது. அதன் பின்னர் 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த தமாகா வெளியேறியது. அதிமுக, தமாகா, பாமக, இடதுசாரிகள் என வலுவான கூட்டணியும், திமுக பாஜக என ஒரு கூட்டணியும் அமைந்தது. அதிமுக பெருவாரியான வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் ரஜினி யாரையும் ஆதரிக்கவில்லை, ஒதுங்கிவிட்டார். திமுகவை ஆதரிப்பாரா?, நண்பர் மூப்பனாரின் தமாகாவை ஆதரிப்பாரா? எதையும் ஆதரிக்காமல் ஒதுங்கிவிட்டார்.ஆனால் ரசிகர்கள் மட்டும் தலைவர் அரசியலுக்கு வருவார் கட்சி ஆரம்பிப்பார் என சொல்லி எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர்.
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. இந்த தேர்தல் நேரத்தில் பாபா படம் வெளியானது. அப்போது பாமக ரஜினி ரசிகர்களிடையே மோதல் உருவானது. இதனால் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டனர். படம் வெளியிட்ட தியேட்டர்களில் தகராறு எழுந்தது. இதனால் ரஜினி ஒரு அறிக்கை விட்டார்.
ராமதாஸ் கேட்டுக்கொண்டிருந்தால் படத்தில் அவர் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்கியிருப்பேன், அல்லது அடுத்தப்படத்தில் இடம்பெறாமல் பார்த்திருப்பேன் ஆனால் ரசிகர்களை தாக்குவது, தியேட்டர்களில் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என அறிக்கை விட்டார்.
ஆகவே பாமக கூட்டணியில் (அப்போது திமுக, பாஜக, பாமக கூட்டணி போட்டியிட்டது) பாமக போட்டியிடும் 6 இடங்களில் தான் பாமகவுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என அறிவித்தார்.
மற்ற தொகுதிகளில் ரசிகர்கள் அவரவர் விருப்பம் போல் வாக்களிக்கலாம் நான் தலையிட மாட்டேன் என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தேர்தலில் பாமக 6-ல் 5 இடங்களில் வென்றது. அதன் பின்னர் ரஜினி அரசியல் பக்கமே வரவில்லை.
அதன் பின்னர் ஜெயலலிதாவுடன் மீண்டும் நட்பு ஏற்பட ஜெயலலிதா கருணாநிதி இருவரிடமும் சமதூரத்தில் இருக்க பழகிக்கொண்டார். அதன் பின்னர் நோ வாய்ஸ். 2006-ல் திமுக ஆட்சியும், 2011 மற்றும் 2016- ல் தொடர்ந்து அதிமுக ஆட்சியும், இடையில் விஜயகாந்த் பெரும் வளர்ச்சியை காண ரஜினி அரசியல் பக்கமே வரவில்லை. அவ்வப்போது தனது படம் வெளிவரும் நேரங்களில் மட்டும் பரபரப்பாக எதையாவது பேசி படத்துக்கான ஆர்வத்தை அதிகாரித்து வந்தார்.
அதற்கு ஏற்றார்போல் இன்றுவரை தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக ரஜினி இருப்பதும், அவரது படத்துக்கு உலக மார்க்கெட் இருப்பதும் ரஜினியை பட வியாபார பக்கமே தள்ளியது. ரஜினிக்கு அடுத்த இடத்தில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு அவர் மார்க்கெட் இருந்ததால் அவர் அரசியலைப்பற்றி யோசிக்கவே இல்லை. இந்த காலக்கட்டங்களில் தற்போது கருத்துக்கூறுவது போன்று எப்போதாவது கூட கருத்து கூறியது இல்லை.
ரஜினி நல்லவர், யார் வம்பு தும்புக்கும் போகாதவர் அரசியலுக்கு வருவார் இது பொதுவான மக்களின் கருத்து. தலைவர் வருவார், வந்தால் அது மிகப்பெரிய பிரவேசமாக இருக்கும் இது ரசிகர்களின் பார்வை. இதை வைத்துக்கொண்டே 1996- முதல் 2016 வரை ஒரு மனிதர் குதிரைக்கு கொள்ளு காண்பிப்பதுபோல் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்களை வைத்துக்கொண்டே திரையுலகில் காலத்தை தள்ளியது எவருக்கும் வராத சாமர்த்தியம். இடையில் 4 பொதுத்தேர்தல் வந்து போய்விட்டன.
2016-ம் ஆண்டு தமிழக அரசியல் களத்தில் 2 முக்கிய மாறுதல்கள் நடக்கின்றன. இருபெரும் தலைவர்களில் ஆட்சியிலிருக்கும் ஒருவரின் மரணம், எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தலைவரின் வயோதிகத்தால் வந்த அரசியல் முடக்கம். இதில் இன்னொரு விஷயம் 2014- நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் வீசிய மோடி அலை தமிழகத்தில் எடுபடவில்லை. அதற்கு தடையாக இருந்தது திராவிட கட்சிகள்.
அதில் ஒரு கட்சியின் தலைவி மறைந்தார், இன்னொரு கட்சியின் தலைவர் முடங்கினார். தேசிய கட்சியான பாஜக காலூன்ற இதுதான் சரியான நேரம் என திட்டமிட்டது. ஆனால் பாஜகவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை, என்ன செய்வது. பெரும் தலைவர்கள் இல்லாத நேரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தால் அந்த கட்சிகளுக்குள் வரும் குழப்பத்தை பயன்படுத்தி தோதான நபரை கொண்டுவந்தால் பின்னர் மாற்றத்தை கொண்டு வரலாம் என திட்டமிட்டது.
இந்த நேரத்தில் தான் அரசியலுக்கு வருவேன், வருவேன் கூறி வந்த ரஜினி களம் இறக்கப்பட்டார். உங்களுக்கு அரசியல் வேண்டாம் என ஆலோசனை சொன்ன சோ மறைந்துவிட்டதாலும், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத களத்தில் எளிதாக சாதிக்கலாம் என நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தார் ரஜினி. அவ்வளவு நாள் 2004-ம் ஆண்டுக்குப்பின் வாய்மூடி மவுனமாக இருந்த ரஜினி இரண்டு முறை பேசினார்.
முதன்முறை மண்டபத்தில் அரசியல் அறிவிப்பு. ஆன்மிக அரசியல், நேராக சட்டமன்ற தேர்தல், கொள்கை, கட்சிப்பெயர் அந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றெல்லாம் பேசினார். அடுத்து ஏசி சண்முகம் கல்லூரி விழாவில் பேசியது. அதில் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது, அதை நான் நிரப்புவேன், நான் எம்ஜிஆர் ஆட்சியைத்தருவேன் என கட்சி ஆரம்பிக்காமலேயே பேசினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் மிக பிரபலமாக்கப்பட்டது. அதில் உள்ள குற்றங்குறைகளை, நடைமுறை பிரச்சினைகள் குறித்து அக்கறையுடன் கேள்விக்கேட்டோர் கூட எதிரிகளாகவும், திமுக ஆதரவாளர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். திடீரென ரஜினி ரசிகர்களாக இல்லாத இடையில் வந்த 30 வயதுகள் அல்லது அதற்குள் உள்ளவர்கள் ரஜினி ரசிகர்களாக உருவெடுத்தனர். தலைவா கோஷம் எங்கும் ஒலித்தது.
ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளம் எங்கும் ரஜினி ரசிகர்கள் போன்று ஒரு கூட்டம் ஆக்கிரமித்தது. ஆனால் அவர்கள் ரஜினியின் ரசிகர்கள் என்பதைவிட திமுக, அதிமுக எதிர்ப்பாளர்கள், தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள், பாஜக ஆதரவாளர்கள் என வரிசைப்படுத்தும் விதமாக இருந்தார்கள். ரஜினி ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவர்களால் அரவணைக்கப்பட்டார், குறிப்பிட்ட கட்சியின் வெகுஜன இயக்கங்களின் தலைவர்களால் நெருக்கமாக பார்க்கப்பட்டார்.
அவரது ஆன்மிக அரசியல் கோஷம் ஒரு சாரர் சார்ந்ததோ என எண்ணும் அளவுக்கு போனது. ரசிகர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆரம்பத்தில் ரஜினிக்காக உழைத்தவர்கள் ஒதுங்கினார்கள். சம்பந்தமே இல்லாத ராஜு மகாலிங்கம் போன்ற சினிமா நிர்வாகிகள் மன்ற பொதுச் செயலாளர் ஆனார்கள். இதற்கிடையே அரசியல் என்று சொல்லியே 3, 4 படம் நடித்து முடித்தார் ரஜினி.
இடையில் 2019 நாடாளுமன்ற தேர்தல் வந்தது, தமிழக உள்ளாட்சித் தேர்தல் வந்தது. வழக்கம் போல் மக்கள் பிரச்சினையில் ஓரணியாக நின்றவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியில் இருப்பதால் வலுவான கட்சியாகவும், திமுக அதற்கு நிகரான இடங்களை பெற்றதால் வலுவான கட்சியாகவும் தங்கள் தலைவர்கள் மறைந்தாலும் தங்களை நிலை நிறுத்திக்கொண்டன.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப்பின் ஸ்டாலின் எதிர்ப்பில்லாமல் தலைவரானார். அவரது வழக்கமான பாணியை கைவிட்டு கருணாநிதி பாணியில் கூட்டணிக்கட்சிகளை அரவணைத்துச் சென்றதால் தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சிக்கூட்டணி திமுக தலைமையில் உள்ளது. மத்திய மாநில அரசுகளை எதிர்த்த அரசியல், 2021 சட்டமன்ற தேர்தல் போன்ற காரணங்களால் திமுக கூட்டணி பிசியாக உள்ளது.
ஆனால் 2017-ல் அரசியலுக்கு வருவேன், வெற்றிடத்தை நிரப்புவேன், எம்ஜிஆர் ஆட்சியைத்தருவேன் என்று வேகமாக பேசிய ரஜினி அதன் பின் மவுனமாகி விட்டார். ட்விட்டர் சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் வேகமாக பேசினாலும் நடைமுறை அரசியல் இல்லாமல் வருவார், வருவார் என அதையே பேசுவதால் இதையேதான் சொல்வார் என்கிற எண்ணம் மக்களிடையே வந்துவிட்டது.
இடையில் 2017-ம் ஆண்டில் மக்கள் மன்ற பணிகள் வேகமெடுத்தது. இடையில் மன்ற நிர்வாகிகள் நியமனத்தில் காசு பார்ப்பதை அறிந்த ரஜினி உடனடியாக அனைத்தையும் நிறுத்தினார். வழக்கமான தமிழக அரசியலில் இருக்கும் இதுபோன்ற சிறு குற்றங்களைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நல்ல மனம் கொண்டவர்தான் ரஜினி. யாரையும் கடிந்துக்கொள்வதோ, நாகரிகமற்ற முறையில் பேசுவதோ, அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் வழக்கமோ இல்லாதவர் ரஜினி.
இது நடைமுறை அரசியலுக்கு பொருந்தாத ஒன்று. அதையும் தாண்டி இந்த 3 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகளில் ரஜினி வாய் திறந்தது (ட்விட்டர் மூலம்) ஒன்றிரண்டு விஷயங்களில் தான். அதிலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் வன்முறையாளர்கள் புகுந்தனர் என பேட்டி அளித்ததும், கோபப்பட்டதும், பின் தன்னிலை விளக்கம் கொடுத்ததும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அவருக்கு இருந்த பெரிய குழப்பமே தினசரி நிகழ்வுகளில் கருத்து சொல்வதா? சொல்லாமல் இருப்பதா? தேசிய கட்சியின் எண்ணத்துக்கு ஏற்ப தமிழகத்தில் செயல்படுவதா? மக்களை பாதிக்கும் விஷயங்களில் கருத்து கூறுவதா? வேண்டாமா? மத்திய அரசின் நண்பர்களுக்கு எதிராக கருத்து கூறினால் அவர்கள் என்ன நினைப்பார்கள்.
மக்களுக்கான அரசியல் கட்சியாக கொண்டுச் செல்வதாக இருந்தால் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் கடுமையாக கருத்தை வைக்க நேரிடும், அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கு ஆதரவான நிலை எடுக்காவிட்டால் அரசியல் கட்சியை நடத்த முடியாது.
அரசியல் கட்சி என்றால் என்ன கொள்கையை முன் வைப்பது. தனக்கு முதல்வராக விருப்பம் இல்லை என்ற எண்ணம் போன்றவை 2017-லிலிருந்து 2020 வரை ரஜினியை குழப்பிய எண்ணங்கள். மக்கள் பிரச்சினையில் துணிந்து கருத்து கூறுவதும், போராட்டத்தில் குதிப்பதும் அரசியல் கட்சித்தலைவர்கள் நிலைப்பாடாக இருக்கவேண்டும். தினசரி பிரச்சினைகளை ட்விட்டர், அரசியல் அறிக்கை என ஏதோ ஒருவகையில் தனது ஆதரவு அல்லது எதிர்ப்பு கருத்தை பதிய வைக்கவேண்டும்.
ஆனால் இவை எதையுமே செய்யாமல் 3 ஆண்டுகள் வாளாவிருந்தார் ரஜினி. அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்டாலே ரசிகர்கள், நிர்வாகிகள் கோபப்பட்டனர். சினிமா வசனத்தை எடுத்து விட்டனர். ஆனால் ரஜினி அவரது திரையுலக வியாபாரத்தில் சரியாக அவர் பங்கை ஆற்றிவந்தார். மறுபுறம் ரசிகர்களே சோர்ந்துபோகும் வண்ணம் எந்த அறிவிப்போ, கொள்கையோ எதுவும் இல்லாமல் மவுனமாக 3 ஆண்டுகள் நகர்ந்தது.
ரஜினி சொல்லாமலே அவர் எங்கள் கட்சிக்கு ஆதரவானவர் என ஒரு சாரர் முத்திரைக்குத்தினர். திராவிடக்கட்சிகளை ஒரங்கட்ட ரஜினி தான் சரியானவர் என்றனர். எப்படி வருவார், 234 தொகுதிகள் ஆச்சே தேர்தல் பணி சாதாரணமானதா? இரு பெரும் கட்சிகளை ஒருசேர எதிர்க்க என்ன திட்டம், பாஜக குறித்த நிலைப்பாடு என்ன என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் பூஜ்யம், அல்லது கேள்விக்கேட்டவர் மீது பாய்ச்சல் ஒன்றே பதிலாக இருந்தது.
ரஜினி கை காட்டாமலேயே ரஜினி நல்லவர், வல்லவர் அவர் அப்படி நினைக்கிறார், இப்படி நினைக்கிறார் என்றெல்லாம் ஓய்வுப்பெற்ற அரசியல் கட்சித்தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மாற்றுக்கட்சியில் இருப்பவர்கள் என பலர் கிளம்பி வந்து பேட்டியெல்லாம் கொடுத்தனர். ரஜினி மக்கள் மன்றம் வார்டுதோறும் தயாராகி வருகிறது, பூத் கமிட்டிவரை ஆட்கள் போட்டாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள்.
போர்ப்பயிற்சி இல்லாமல் போருக்கு போக முடியாது. என்னதான் கத்தி என்றாலும் அதை தினம் தினம் தீட்டினால் தான் கூர்மை மழுங்காமல் இருக்கும். ஆனால் போர் தொடங்கும்போது இணைகிறேன் என்ற வசனம் ஹாஷ்டேக் போட்டு பூரிப்படைய சரியாக இருக்கும் நடைமுறைக்கு உதவாது என்பது யதார்த்தம் உணர்ந்த பலர் சொல்லியும் எடுபடவில்லை.
ஜூலையில் அறிவிப்பு, செப், டிசம்பர் மாநாடு பிப்ரவரியில் வேட்பாளர் பட்டியல் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இவை எப்படி சாத்தியம் என்கிற கேள்விக்குள்ளே போகாமல் நம்பினார்கள் ரசிகர்கள். சுனாமி போல் கொரோனா வந்தது. 6 மாதம் உலகத்தையே முடக்கியது. அதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கா?
ஆனால் ஜூலை மாத அரசியல் கட்சி அறிவிப்பு, குறைந்தப்பட்சம் செப்டம்பரில் அறிவிப்பும் காணாமல் போனது. நவம்பரில் ஜூம் மீட்டிங் என இடையில் பேச்சு அடிபட்டது அதுவும் காணாமல் போனது. அரசியல் இயக்கம் நடத்துவது என்றால் கொரோனா போன்ற இக்காட்டான நேரத்திலும் செயல்படணும், மக்களிடம் நேரடி செயல்பாட்டில் இருக்கவேண்டும் என்பதை திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் செயலால் நிரூபித்தார்கள்.
பலரும் அதில் பாதிக்கப்பட்டனர். ஆனால் ரஜினி வெளியே வரவில்லை. அவரது உடல் நிலை அவருக்கு நடந்த அறுவை சிகிச்சை கொரோனா எளிதாக தொற்றும் வாய்ப்புள்ளது என்பதால் அன்பு கொண்ட யாரும் அதை முன்னிருத்தவில்லை. கேள்வி எழுப்பவில்லை. ஆனால் மக்களால் விரும்பப்படும் ரஜினி மக்கள் தலைவராக, அரசியல் தலைவராக மாற வேண்டுமானால் அப்படி இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம்.
இதன் பொருள் அவர் கொரோனாவை பொருட்படுத்தாமல் வெளியே வரவேண்டும் என்பதல்ல. அரசியல் இயக்கம் ஆரம்பித்தால் அரசியல் களத்தில் இருந்தால் அன்றாடப்பணியில் வெளியில் வந்துதான் ஆகவேண்டும் என்பதே யதார்த்தம் எனக் குறிப்பிடுவதற்காகவே. அப்படி செயல்பட்ட என்னற்ற தலைவர்கள் அமித்ஷா முதல் தமிழக அமைச்சர்கள் வரை கொரோனா பாதித்து மீண்டுள்ளனர். அற்புதமான அரசியல் தலைவர்கள் சிலர் இன்னுயிரை ஈந்துள்ளனர்.
இன்றும் திமுக, அதிமுக தலைவர்கள் 65 வயதைக் கடந்தவர்களே, பலருக்கும் நால்பட்ட நோய்கள் உள்ளன. ஆனாலும் பொதுவாழ்வில் ஈடுபடுகின்றனர். இதையெல்லாம் குறிப்பிடக்காரணம் ரஜினியின் செயலை சிறுமைப்படுத்த அல்ல, இதுதான் யதார்த்தம், இனியும் சிந்துப்பாத்தின் கன்னித்தீவு கதை போல் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு நீளுமா? அல்லது இம்முறையாவது சொல்லிவிடுவாரா? என்பதே.
ரஜினி தன் மனதுக்கு தோன்றியதை உடனடியாக செய்யக்கூடியவர். யாரும் அவரிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது. அவருக்கு முதல்வர் பதவி மீது ஆசையும் கிடையாது. இதெல்லாம் ரஜினியை அறிந்தவர்கள் சொன்னது. யாருக்கும் அதில் மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் யாருடைய விருப்பத்துக்காகவோ ரஜினி விரும்பாமலேயே அரசியல் அறிவிப்புக்காக தள்ளப்படுகிறார். தற்போது கொரோனா தொற்று பரவியுள்ள காலகட்டம், தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது, அவரது உடல் நிலை மருத்துவர் ஆலோசனை ஆகியவை அவரை சிந்தித்து அறிக்கை விட வைத்துள்ளது.
இம்முறை மருத்துவர்கள் சொன்னதை குறிப்பிட்டுள்ள ரஜினி தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று அறிவித்துள்ளார். அவர் முடிவு இம்முறை தெளிவாக வருகிறேன், இல்லை வரவில்லை என இருக்குமா? அல்லது மீண்டும் கன்னித்தீவு கதை போல வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்கிற அறிவிப்போடு நீளுமா என்பதே ரசிகர்கள் மட்டுமல்ல ரஜினிமீது அபிமானம் கொண்ட, நேசிக்கிற கோடிக்கணக்கான மக்கள் முன் உள்ள கேள்வி.