முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யுமென எல்.முருகன் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இல்லை என பாஜக தெரிவித்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் தான் கூட்டணி என பாஜக தெரிவித்துவிட்டது.
சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்துவிட்டாலும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை தேசிய தலைமை அறிவிக்கும் என கருத்து தெரிவிக்கிறார் எல்.முருகன். அதன் தொடர்ச்சியாக அவர் சொன்ன இன்னொரு கருத்தும் சர்ச்சையாகியுள்ளது.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனவும், ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.
read more: சட்டமன்றத் தேர்தல்: நேரடி பிரச்சாரத்தில் இறங்கும் ஸ்டாலின்
ஆனால் முருகனின் கருத்து ஏற்கத்தக்கதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசிவரும் முருகனை நீக்க வேண்டுமென பாஜக தலைமைக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி வலியுறுத்தினார். அன்வர் ராஜா, அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்றால் முதல்வர் வேட்பாளரை ஏற்க வேண்டும் இல்லையென்றால் கூட்டணி தொடர இயலாது என்று கருத்து தெரிவித்தார்.
ஏற்கனவே மக்களவைத் தேர்தல் கூட்டணி தலைமை தொடர்பாக சிக்கல் எழுந்தபோது தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் எனவும், தேசிய அளவில் பாஜகதான் தலைமை வகிக்கும் என்றும் இரு கட்சிகளின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.