மிகவும் வித்தியாசமான, அதிகம் கேள்விப் படாத நிலநடுக்கம் ஒன்று முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பூமராங் போல செயல்படுகிறது. பாம்பு போல வளைந்து நெளிந்து ஒரு சீரான பாதையில் செல்கிறது.
கோட்பாட்டு ரீதியில் இதுவரை சொல்லப்பட்டு வந்திருந்தாலும் முதல்முறையாக அறிவியல் ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது அடிக்கடி நிகழ்வது தான் என்றும் ஆனால் இதனால் சுனாமி போன்ற பேரலைகள் நிகழ வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் கடல் பகுதிகளில் தான் நடைபெறும். மேலும் இத்தகைய நிலநடுக்கத்தில் கண்ட தட்டுகள் வித்தியாசமான முறையில் நகர்கிறது என கூறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை ஆராய்வதன் மூலம் அமெரிக்காவின் சான் ஆண்ட்ரியாஸ் போன்ற கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் குறித்தும் கண்டத்தட்டு நகர்வுகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.
இத்தகைய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்படும் எபிசெண்டர் எனப்படும் நடுப்பகுதியில் ஆற்றலானது பரவலாக பல இடங்களுக்கு பரப்பப்படுவதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. நாம் எப்பொழுதும் ஒரு நிலநடுக்கத்தை கணிக்க முடியாது. ஒவ்வொரு நிலநடுக்கம் குறித்த தரவுகளும் நமக்கு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.