ரபாடாவின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
துபாய்:
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி ஸ்டொய்னிஸ் அதிரடி அரைசதத்தால் 196 ரன்கள் அடித்து பெங்களூர் அணிக்கு 197 ரன்கள் இலக்காக வழங்கியது.
197 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணி சார்பில் பட்டிகல், ஆரோன் பின்ச் தொடக்க வீரர்களாக உள் புகுந்தனர்.அடுத்தடுத்து பட்டிகல்,பின்ச் சொற்ப ரன்களில் வெளியேற,பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி டிவில்லியர்ஸும் 9 ரன்களுடன் நோர்கியா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.மறுமுனையில் கேப்டன் விராட் கோலி போராட,பெங்களூர் அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 63 ரன்களுடன் தடுமாறியது.அடுத்து வந்த மொயின் அலியும் பெரிதாக நிலைக்கவில்லை.அவரும் அக்சார் பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, 14 வது ஓவர் வீசிய ரபடா பந்தில் பெங்களூர் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த விராட் கோலி(43 ரன்கள்,39 பந்துகள்) விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் ஆனார்.
14 வது ஓவர் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து இருக்க,அஸ்வின் வீசிய 15 வது ஓவரில் துபே ஒரு சிக்ஸர் அடித்து பெங்களூர் அணி 100 ரன்கள் கடக்க உதவி செய்தார்.அடுத்து ரபடா ஓவரில் வாஷிங்டன் சுந்தர்(17 ரன்கள்,11 பந்துகள்) 2 பௌண்டரிகளை ஓட விட்டு அதே ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.18 பந்துகளில் 79 ரன்கள் பெங்களூர் அணிக்கு தேவையாக இருக்க,சிவம் துபே (11 ரன்கள்,12 பந்துகள்) ரபடா பந்தில் கிளீன் போல்ட் ஆக, அதே ஓவரில் உடானாவும் 1 ரன்களோடு வெளியேறினார்.நோர்கியா பந்தில் சிராஜ் 5 ரன்கள் அடித்து கிளீன் போல்ட் ஆக பெங்களூர் அணிக்கு 6 பந்துகளில் 70 ரன்கள் தேவையாக இருந்தது.20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே அடித்தது,டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அக்சார் பட்டேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.