கால்பந்து போட்டியின்போது, சகவீரர்கள் அல்லது நடுவரின் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினால், போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும் என இங்கிலீஷ் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையிலும், ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஆனால் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகின்றன.
ஒருவரிடமிருந்து மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மைதானங்களில் அடிக்கடி துப்பக்கூடாது, வீரர்கள் கோல் அடிக்கும் போதோ அல்லது வெற்றி பெறும் போதோ, சந்தோஷத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது போன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்ள்ளன. முடிந்த அளவு சமூக இடைவெளியைப் பின்பற்றி விளையாட வேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர் அணியினர் முன்பு இருமினாலோ அல்லது, நடுவர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலோ, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிடலாம், அல்லது மஞ்சள் அட்டை காட்டி வார்னிங் கொடுத்து தண்டிக்கலாம், என நடுவருக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில், இங்கிலாந்து கால்பந்து சங்கம் வழிகாட்டு நெறிமுறையை திருத்தம் செய்துள்ளது.
ஆனால், அடிக்கடி இருமினாலோ அல்லது மைதானத்தில் துப்பினாலோ தண்டிக்கப்படமாட்டார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.