சையது முஷ்தாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டியில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
அகமதாபாத் :
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் சையது முஷ்தாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் நேருக்கு நேர் மோதினர். முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, பரோடா அணியின் தொடக்க வீரர்களாக தேவ்டர் மற்றும் நினாத் ரத்வா களமிறங்கினர். தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தொடக்கத்தில் இருந்து சுழற்பந்து வீச்சை பயன்படுத்த திட்டமிட்டு சித்தார்த் மணிமாறனை களமிறங்கினார். ஆரம்பம் முதலே சிறப்பாக வந்து வீசிய சித்தார்த் அடுத்தடுத்து விக்கெட்களை எடுக்க, பரோடா அணியில் 3 வது வீரராக களம் இறங்கிய வி. சோலங்கி அதிகபட்சமாக 55 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். இதனால் பரோடா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது.
தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்களையும், பாபா அபரஜித், சோனு யாதவ், எம். முகமது ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
Read more – இன்றைய ராசிபலன் 01.02.2021!!!
121 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆரம்பத்தில் ஜெகதீசன் 14 ரன்களில் வெளியேறினாலும். அடுத்து வந்த பாபா அபரஜித் நிலைத்து நின்று ரன்களை திரட்டினார். ஹரி நிஷாந்த் 35 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 22 ரன்களும் பெற்று அவுட் ஆகி இருந்தனர்.
அதன்பிறகு களமிறங்கிய ஷாருக் கான் 7 பந்தில் 18 ரன்களை அடித்து அசத்த, தமிழ்நாடு 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு அணியில் ஷாருக் கான் 18 ரன்களுடனும், பாபா அபராஜித் 29 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்த தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த சித்தார்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.