பிப்ரவரி 12 ஆம் தேதி, ஏலே படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், திரைப்பட உரிமையாளர்கள், படம் வெளியாகி 30 நாட்கள் கழித்துத் தான் ஓடிடியில் வெளியிடப்படும் என்ற உறுதிக் கடிதம் கேட்டனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அவ்வாறு கடிதம் தர மறுத்து விட்டது.
அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. எனவே, படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதனையடுத்து, விஜய் டிவியில் பிப்ரவரி 28 ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு படம் வெளியாகிறது.
திரையரங்க உரிமையாளர்கள் புதிதாக இப்படி நிபந்தனைகள் விதிக்க அண்மையில் வெளியான மாஸ்டர் படம் தான் காரணம். கொரனா காலத்தில், பொது முடக்கம் காரணமாக திரையரங்களும் மூடப்பட்டது. ஆனால், மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்க சில படங்கள், திரையரங்க வெளியீட்டிற்குக் காத்திருக்காமல் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானது. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தரம் இல்லாதது என்று சொல்லப்பட்டு வந்த, கருத்தை ‘சூரரைப்போற்று’ மாற்றியமைத்தது.
மக்களும் திரையரங்குகளுக்கு செல்ல முடியாத குழலில் ஓடிடி தளங்களையே பொழுதுபோக்குக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தீபாவளிக்கு வெளியாக இருந்த, இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தைத் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர்.
பொது முடக்கத்தில், தளர்வுகள் செய்த பிறகு, ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸானது மாஸ்டர். திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை வாரிக் குவித்தது. ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. திரையரங்கில் படம் வெளியாகி 14 நாட்களில் ஓடிடியிலும் ரிலீஸானது.
இதற்கு, திரையரங்க உரிமையாளர்கள், தங்கள் வசூல் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் ஒரு மாற்றமும் நிகழவில்லை. எனவே தான் ஏலே படத்திற்கு இப்படி ஒரு கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் வைத்துள்ளனர். இதுமட்டுல்லாமல், தற்போது நேரடியாக தொலைகாட்சியில் வெளியிடும் பாணியும் பிரபலமடைந்துள்ளது. அண்மையில் புலிக்குத்தி பாண்டி படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கத்தில் படங்கள் வெளியாவது போய் ஓடிடி தளங்களில் வெளியானது. தற்போது, ஒரு படி மேலே போய் நேரடியாக தொலைகாட்சியில் வெளியிடப்படுகிறது. மாற்றம் ஒன்று தான் மாறாதது. மாற்றத்திற்கு பழகுவதும் இயல்பு தானே.