தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு, தமிழகத்தில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் வேறு எந்த நடிகைகளுக்கும் கிடைத்ததில்லை. இன்று வரை சின்னத்திரை, வெள்ளித்திரை என மாறி மாறி கொடிகட்டி பறக்கும் குஷ்பு, அரசியலை தேர்வு செய்த போது கூட திராவிட கட்சியான திமுகவை தான் முதலில் தேர்ந்தெடுத்தார். அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கூட, எதிர்க்கட்சியான அதிமுகவையோ, பாஜகவையோ அவர் சிந்திக்கவில்லை. திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸில் இணைந்தார்.
காரணம் குஷ்பு ஒரு இஸ்லாமியர் என்பதால், அவருடைய அடிப்படை கொள்கையே பாஜக எதிர்ப்பு தான். பாஜகவின் மதவாத அரசியலை கடுமையாக எதிர்த்தவர் குஷ்பு. சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு விரோதமான குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது கூட அதை கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனவேதனை குஷ்புவிடம் இருந்தாலும், அதை தைரியமாக பல இடங்களில் வெளிக்காட்டவும் செய்தார். ஆனால் காங்கிரஸை விட்டு ஒட்டுமொத்த விலகும் முடிவை திடீரென அவர் எடுக்க காரணமே வேறு.
பாஜகவில் கிடைக்கப்போகும் பதவியை விட, குஷ்புவிற்கு தற்போது மிகவும் நெருக்கடியாக இருந்தது பணம். திரையுலகில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் சுந்தர் சிக்கு கோடிக்கணக்கில் பண தேவை ஏற்பட்டுள்ளது. குஷ்பு பாஜகவில் சேர்ந்ததால் பல கோடிகள் கைமாறி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகவும் பல ஊடகங்களில் குஷ்பு பாஜகவில் இணைய பேரம் நடப்பதாக செய்திகள் வெளியாகின.
குஷ்புவை பாஜகவில் இணைக்க முழுக்க, முழுக்க முயன்றது சுந்தர் சி தானாம். ஆரம்பத்தில் இருந்தே குஷ்புவிற்கு அழுத்தம் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனோடு பேச்சுவார்த்தை நடத்தியது முதல் சுந்தர் சி தான் பெரும் பங்காற்றியுள்ளார். பாஜக தலைமை இதில் பெரிதாக ஆர்வம் கட்டவில்லை என்பது குஷ்புவின் இணைவு விழாவின் போதே வெளிச்சத்திற்கு வந்து விட்டது. ஆம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய வேண்டிய குஷ்புவை, தேசிய செயலாளர் ரவி என்பவர் முன்னிலையில் கட்சியில் சேர வைத்ததில் இருந்தே குஷ்புவிற்கான மதிப்பு என்ன என்பது வெளியாகிவிட்டது. அரசியல் நேரத்தில் குஷ்புவை கவர்ச்சி விளம்பரத்திற்காக பாஜக பயன்படுத்திக் கொள்ளுமோ தவிர, பெரிதாக பொறுப்புகளோ, பதவிகளோ வழங்கப்படமாட்டாது என அரசியல் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.