அமெரிக்காவின் அதிபர் தேர்தல் என்பது உலக நாடுகளால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்று தான். ஆனால் இம்முறை இந்தியர்களால் இந்த தேர்தலின் முடிவு அதிகமும் எதிர்பார்க்கப்பட்டது மேலும் ஜனநாயக கட்சியின் வெற்றி, தமிழ்நாட்டில் எங்கோ இருக்கும் கிராமத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது என்றால் அதற்கு ஒரே காரணம் கமலா ஹாரிஸ் தான்.
இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ்:
ஜோ பிடன் தான் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடப் போவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். துணை அதிபராக ஒரு பெண்ணை போட்டியிட வைப்பதாக கூறியிருந்தார். அதன்படி ஜோ பிடன் தனது வெற்றிப்பாதையில் ஒரு பெண்ணை துணை அதிபராக கொண்டு வந்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் ஆவார். கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபரான முதல் கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்கா பெண் ஆவார்.
கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாய் சியாமளா கோபாலன் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்தவர். இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம். சியாமளா கோபாலன் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். கமலா ஹாரிஸின் பெற்றோரின் விவாகரத்துக்கு பிறகு அவரும் அவரது தங்கையும் தனது தாயால் கறுப்பின கலாச்சாரப்படியே வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
கமலா ஹாரிஸின் கணவர் டவுக் எம்ஹோஃப் யூத இனத்தை சேர்ந்தவர். இவரது தங்கை மாயா ஹாரிஸ் நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்திருக்கிறார்.
சமீப நாட்களில் கமலா ஹாரிஸின் வெற்றி என்பது ஒட்டு மொத இந்தியர்களின் வெற்றியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கமலா ஹாரிஸின் பூர்விகமான துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரிஸ்க்கு வெற்றி பதாகைகள் வைக்கப்பட்டன. கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது இந்தியர்களே வெற்றி பெற்றது போல் எல்லாம் வர்ணிக்கப்படுகிறது.
வரலாற்றை சற்று திரும்பி பார்த்தோமேயானால், இது போன்று இந்திய நாட்டை சேர்ந்த சிலர் கொண்டாடப்பட்டனரா? சரி சமமாக நடத்தப்பட்டனரா ? எனக் கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் மிகப்பெரிய கேள்வி குறியே!
இதற்கான சில உதாரணங்களை நாம் கீழே காணலாம்:
1.இந்தியாவின் முக்கிய குடும்பமான நேரு குடும்பம்:
ஜவஹர்லால் நேரு நம் சுதந்திர தாய் நாட்டின் முதல் பிரதமர் ஆவார். மேலும் தொடர்ந்து மூன்று முறை அதாவது 16 வருடங்கள் இந்தியாவின் பிரதமராக இருந்து இருக்கிறார். இவருடைய மகள் இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார். இவரது ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன, மேலும் தொடர்ந்து மூன்று வருடங்கள் இவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திரா பிரியதர்ஷினி பெரோஸ் காந்தி என்னும் குஜராத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரை திருமணம் செய்ததினால் இந்திரா காந்தி ஆனார். இவருக்கு ராஜிவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி என்னும் இரு மகன்கள் இருந்தனர்.இவர்களில் ராஜிவ் காந்தியும் முன்னாள் பிரதமர் ஆவார்.
ராஜிவ் காந்தி – சோனியா காந்தி திருமணம்:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இத்தாலி நாட்டை சேர்ந்த சோனியா காந்தியை திருமணம் செய்து கொண்டார். தனது மாமியார் மற்றும் கணவரின் படுகொலைக்கு பிறகு சோனியா காந்தி பொது வாழ்க்கைக்கு வந்தார். அரசியல் காலம் கண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட தனது சொந்த கட்சிக்காரர்களாலேயே இவர் அயல் நாட்டை சேர்ந்தவர் என்று கூறி இவர் பிரதமர் ஆவதற்கான தகுதி கேள்வி கேட்கப்பட்டது. இது சோனியா காந்திக்கு மட்டுமின்றி இன்றும் ஆங்காங்கே பொது கூட்டங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் இவர்களில் பிள்ளைகளான ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் மீது அயல்நாட்டவர் என்ற விமர்சனம் வைக்க்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமண சர்ச்சை:
உலக புகழ்பெற்ற செரினா வில்லியம்சை எதிர்த்து, திணறடித்து விளையாடியதன் மூலம் ஒட்டு மொத உலகத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர் தான் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பல விமர்சனங்களை சந்தித்தது. சானியா பாகிஸ்தானியரை திருமணம் செய்வது ஏதோ தேச துரோகம் போன்றெல்லாம் சித்தரிக்கப்பட்டது.
கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன் மகள் திருமண சர்ச்சை:
கமலா ஹாரிஸை கறுப்பினத்தார் எனக் கொண்டாடும் இதே நெட்டிசன்கள் தான், கர்நாடக இசைப் பாடகி சுத்த ரகுநாதனின் மகள் ஒரு கறுப்பினத்தவரை திருமணம் செய்ய போகிறார் என பொங்கி எழுந்தன. எதிர்ப்புகள் ஒரு படி மேலே போய் இனி சுதா ரகுநாதன் சபாக்களில் பாடவே கூடாதென கருத்துக்கள் பதிவிட்டனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்க இருப்பது உண்மையாகவே நமக்கெல்லாம் ஒரு பெருமிதமான நிகழ்வு தான். ஆனால் எங்கோ, யாரோ கொளுத்தி போடும் சில தேவையற்ற வெறுப்பு வார்த்தைகள் நம் சொந்த நாட்டில் பலரை காயப்படுத்துகிறது. தாய் மட்டுமே இந்தியாவை சேர்ந்தவர், தந்தை மற்றும் கணவர் அயல்நாட்டவர் எனக் கொண்ட கமலா ஹாரிஸை நாம் கொண்டாடுகிறோம். தாய் மட்டுமே அயல் நாட்டவரை சேர்ந்தவர் என்பதற்காக இன்றுவரை பல எதிர்கட்சிகளால் நேருவின் வாரிசுகள் அயல்நாட்டவர்கள் என விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்தியா மத சகிப்புத்தன்மை கொண்ட நாடு, இது சில காழ்ப்புணர்ச்சி கொண்ட விஷமிகளால் சூறையாடப்பட்டு கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவின் முதல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை கொண்டாடும் நாம், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை இந்த அளவுக்கு அந்நாளில் கொண்டாடினோமா?