சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த நான்காண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்தியதால் தண்டனை காலம் முடிந்ததும் முறையாக ஜனவரி 27ஆம் தேதிவிடுதலை செய்யப்பட்டுள்ளார் சசிகலா.
சசிகலாவுடன் சேர்ந்து சிறைக்குச் சென்ற சுதாகரன் அபராதத் தொகையை செலுத்தாததால், தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலையாவதற்கு ஒரு வாரம் முன்பாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, விடுதலைக்குப் பின்னும் விக்டோரியா மருத்துமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டும் போது, சசிகலா தமிழகம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா விடுதலையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா? சரி, ஏன் இந்த கேள்வி வருகிறது? தமிழக அரசியலுக்கும் சசிகலாவிற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அனைவருக்கும் எழாமல் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான தோழியாக தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் சசிகலா. ஜெயலலிதா இருந்த வரையில் வெளிப்படையான அரசியலில் சசிகலா ஈடுபட்டது கிடையாது.
ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பின், அரசியலில் மட்டுமின்றி உடையில் கூட ஜெயலலிதாவாக மாற நினைத்த சசிகலாவை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. பின், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்து விட்டு சிறைக்கு சென்று விட்டார் சசிகலா. கட்சி தலைமை குறித்த பிரச்சினையில் ஈபிஎஸ்,ஓபிஸ் தரப்பினருக்கும் சசிகலா தரப்பினருக்கும் மோதல் வெடித்தது.
ஆரம்பத்தில் சசிகலா தான் கட்சி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கெஞ்சிய ஈபிஎஸ் ஓபிஸ் தரப்பினர் கூட திடீரென, பல்டி அடித்து விட்டனர். இதில் சசிகலா தரப்பினர் அதிமுகவில் இருந்து பிரிந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்கள்.
பின் ஈபிஎஸ்க்கும் ஓபிஸ்க்கும் ஏற்பட்ட மோதல் தனிக்கதை.
சசிகலா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். சசிகலா சிறையில் இருந்த போதும், சிறையின் விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. சசிகலா தற்போது விடுதலையாகி இருக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. சசிகலா சிறையில் இருந்த போது, நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமமுகவால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை.
இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வர் பழனிச்சாமியும் சசிகலாவிற்கு மீண்டும் கட்சியில் இடம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் வெளியே வரும் சசிகலாவின் திட்டம் என்ன? தமிழகம் வரும் சசிகலா அமமுகவை முன்னேற்றுவாரா? இல்லை அதிமுகவில் கட்சி தலைமையை பிடிக்க முயற்சிப்பாரா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழியாக சசிகலாவை ஏற்ற கட்சியினர் கூட தற்போது அரசியல்வாதியாக அவரை ஏற்க தயாராக இல்லை என்பதே நிதர்சனம். விடுதலையாகி வரும் சசிகலாவினால் அரசியலில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்பதே பல தலைவர்களின் கருத்தாக உள்ளன.