“ஐயோ.. அம்மா.. முடியலையே..”
“யாரது?”
“நான் தான்டா உன் கல்லீரல் பேசுறேன்.”
“என்னது கல்லீரலா?”
“உன் லிவர்டா மடையா.”
“எங்க இருந்து பேசுற?”
“உன் மார்புக்கூட்டுக்குக் கீழ வலது பக்கம் கைய வை. ஆ… அமுக்காதடா”
“சரி இப்ப எதுக்கு முனகின?”
“கேப்படா..கேப்ப.. கொஞ்ச நஞ்ச பாடா படுத்துற?”
“அப்படி என்ன வேலை செய்ற நீ? இப்படி அலட்டிக்கிற?”
“அடப்பாவி நீ திங்கிறியே சோறு..
அதை செரிமானம் பண்ணி அதுல உள்ள குளுக்கோஸ பிரிச்சு எடுத்து அத கிளைக்கோஜனா மாத்தி, பின்னாடி பயன்படுத்துறதுக்காக சேர்த்து வைக்கிறது நான் தான். இன்னிக்கு கூட காலையில சாப்பிடாம அப்படி ஆபீஸ்க்கு ஓடுனியே.. அப்போ அந்த கிளைக்கோஜனத் திரும்பி குளுக்கோசா மாத்தி உனக்கு எனர்ஜி கொடுத்தது நான்தான். இல்லனா இரத்தத்துல குளுக்கோஸ் அளவு கொறஞ்சு போயி எப்பவோ மயங்கி விழுந்துருப்ப.
பீட்சா, பர்கர், இன்னும் என்னென்ன கண்றாவியையோ முழுங்குறியே.. அதையெல்லாம் செரிமானம் பண்றது நான் தான். இப்படியே கொழுப்புள்ள ஐட்டங்களையே விட்டு எறக்குனனு வை, ரத்தத்துல கொழுப்பு கூடி இரத்தக்குழாய் அடச்சு, மாரடைப்பு பக்கவாதம் வந்துரும். என்னால ஒண்ணும் பண்ண முடியாது. இப்பவே பித்தப்பையில் கல் வந்து என் தொண்டை அடைக்குது. பாத்துக்க..”
“நீ சொல்றது சரிதான். நான் சாப்பிடுற நேரம் போக மற்ற நேரம் நீ ப்ரீயா தான இருக்க?”
“அடேய்.. இது மட்டும்தான் என் வேலைனு நினைச்சியா? முந்தாநேத்து பக்கத்து வீட்டுக்காரன் கூட சண்டை போட்டு மண்டையை உடச்சுக்கிட்டியே.. ரத்தமா கொட்டிச்சே.. அப்ப உன் இரத்தத்த உறைய வச்சு நிப்பாட்டினது நானாக்கும். அப்புறம் ரத்தத்துல இருக்குற நச்சுப் பொருட்கள், நீ சாப்பிடற மருந்து, மாத்திரை எல்லாத்தையும் நச்சு இல்லாததா மாத்தி வெளியேத்துறது நான்தான்.
அப்புறம் சில ப்ரோட்டின்ஸ், ஹார்மோன்ஸ் இதெல்லாம் உற்பத்தி பண்ணனும். இதுக்கே நேரம் சரியா போயிருது. இன்னும் நிறைய இருக்கு இதுக்கே நீ கொட்டாவி விட்ற..போதும்..”
“ஒத்துக்குறேன். நிறைய வேலை பாக்குற. நீ ரிப்பேர் ஆனா எனக்கு என்ன ஆகும்?”
“அப்படிக் கேளு. உன் வயித்துல நீர் கோர்த்து வயிறு வீங்கும், கை கால்லாம் வீங்கும், மஞ்சள் காமாலை வரும். ரொம்ப மோசம் ஆயிடுச்சின்னா மோஷன் கருப்பா போகும், இரத்த வாந்தி வரும். இரத்த அணுக்கள் கம்மியாகும். மூச்சுத் திணறி வரும். மூளையக் கூட பாதிக்கலாம்.”
“அய்யய்யோ..இதெல்லாம் வரக்கூடாதுன்னா நான் என்ன பண்ணனும்?”
“இந்த அறிவு இப்பவாவது வந்ததே.. சொல்றேன் கேளு.. சனிக்கு சனி ஒரு சனியனக் குடிக்கிறீயே.. எனக்கே நாத்தம் தாங்க முடியலடா.. அந்த கருமத்த நிப்பாட்டு. அத௧் குடிக்கிறதும் என்னய பெட்ரோல் ஊத்திக் கொளுத்துறதும் ஒன்னு தான். அதனால என்னிய மாதிரி எத்தன பேர் கருகி செத்துருக்காங்க தெரியுமா… அத நீ நிப்பாட்டுனாலே பாதி பிரச்சனை ஓஞ்சது.
சுகர் பிபி எல்லாம் முதல்லயே செக் பண்ணி கன்ட்ரோல்ல வச்சுக்க.
கொழுப்பை குறை சாப்பாட்டுல.
சத்துள்ள உணவுகளை சாப்பிடு.
உடம்புக்கு ஏதும் பிரச்சினைனா டாக்டர்ட்ட போய் பாரு. பெரிய இவன் மாதிரி நீயே கண்ட மாத்திரையப் போட்டு என் உயிரை வாங்காத.
முக்கியமா.. மஞ்சள் காமாலைக்கு சூடு போட்டா சரியாயிடும்னு எந்த மடப்பயடா சொன்னான்? அத மொதல்ல நிப்பாட்டுங்கடா.
நான் சொல்றத சொல்லிட்டேன். என்னய நல்லா வச்சுக்கிறது உன் பொறுப்பு. இப்ப தான் நான் உன்னை நல்லா பாத்துக்க முடியும். அப்புறமா அய்யோன்னாலும் வரமாட்டேன்.. அம்மான்னாலும் வரமாட்டேன்..”
“என்னமோ உன்னை அழிக்கிறது நான் மட்டும்தான்ன்ற மாதிரி பேசுற? நிறைய வைரஸ் கிருமிகளும் கூட உன்ன தாக்குமாமே?”
“அட முட்டாப் பய மவனே.. வர்ற வைரஸ், பாக்டீரியா வந்துகிட்டுதான் இருக்கும். அத நீ பிடிச்சு நிறுத்தப் போறியா? இல்லைல? முடிஞ்ச அளவு வராம பாத்துக்க. அதுக்கப்புறம் நாங்க பாத்துக்கிறோம். அவங்கள போட்டுத் தள்ளத்தான் ஒரு தனிப்படையே வச்சிருக்கோம். அதோட தளபதியே நான் தான். உன்னால என்னத்த கழட்ட முடியுமோ, அதை மட்டும் கழட்டு..புரியுதா?”
“என்னதான் கேவலமா திட்டுனாலும் நீ சொல்றதுல ஒரு பாயிண்ட்டு இருக்கு. சரி யூ டோன்ட் ஒரி. இனிமே உன்னை பூப் போல பாத்துக்குறேன். ஓகே?”
“ஓகே டா மண்டையா.”