தனி மெஜாரிட்டியுடன் வெற்றிப்பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கிறது.
கடந்த மாதம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை தமிழகம் முழுவதிலும் உள்ள 75 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி திமுக கூட்டணி அதிக இடங்களை பெற்று முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.
தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளின் எண்ணிக்கையின் போதும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்க அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பின்னிலையில் இருந்தன. அடுத்தடுத்த சுற்றுகளின் எண்ணிக்கையில் திமுக கூட்டணி 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தனி பெரும்பான்மையை நிரூபித்தது. அதிமுக கூட்டணி 70 இடங்களில் முன்னிலை வகித்தது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வெற்றிப்பெற்றார்.
இந்த நிலையில் தற்பொழுது வரை பெரும்பான்மையான இடங்களை திமுக பிடித்துள்ளதால் அக்கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சர் ஆகிறார். தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தனது வாழ்நாளில் 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார்.
வெற்றிப்பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.