சேலம் அருகே தந்தையை லூசாப்பா நீ என்று கேட்ட மகளை அடித்துக் கொலை செய்தவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
எடப்பாடி அருகே ஆதிகாட்டூரைச் சேர்ந்த கோபால் மனநலம்பாதிக்கப்பட்டு, 6 மாதத்திற்கு முன் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஊரில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார் கோபால். அவரது மகன் ரமேஷ் கண்ணா பாட்டி வீட்டில் தங்கி பேக்கரிக்கு பணிக்கு சென்று வந்த நிலையில், மனைவி மணியும் அடிக்கடி கரும்பு வெட்டும் தொழிலுக்காக வெளியூர் சென்று விடுவார். இதனால் கோபாலும் அவரது 15 வயது மகள் பிரியங்காவும் மட்டுமே வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
அவ்வபோது மனநலம் பாதிப்பிற்குள்ளாகும் கோபாலை கிராமத்தினர் சிலர் கிறுக்கன் என அழைத்து கிண்டலடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், எதேச்சியாக மகள் பிரியங்கா, லூசாப்பா நீ என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபால், மகளை தரதரவென இழுத்துச் சென்று, சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மகளை கொலை செய்துவிட்டதை உணர்ந்து, யாருக்கும் தெரியாமல் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து கோபால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார், தந்தை, மகள் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.