மதுரையில் பாஜக இளைஞரணி தலைவருக்கு பரிசாக துப்பாக்கி கொடுக்கப்பட்ட சம்பவம், பெரும் சரச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் நோடாவுடன் மோதிக்கொண்டு இருக்கும் கட்சி என்ற நிலையை மாற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, போலீஸ் வழக்குகளில் இருந்து தப்பிக்க பல தேடப்படும் குற்றவாளிகளும் கூட, பாஜகவில் தாமாக சென்று சேர்ந்து வருவதை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து காண முடிகிறது.
இந்நிலையில், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி, நிர்வாகிகள் கூட்டம் திருப்பாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார். அவருக்கு அக்கட்சியின் மண்டல தலைவரான தேவகிரி சால்கா என்பவர் துப்பாக்கியை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.
தேவகிரி சால்கா மதுரை அய்யர் பங்களாவில் அரசு உரிமத்தோடு ஏர்கன் தயாரிப்பவர் என்றும், அதன் காரணமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வத்திற்கு அந்த ஏர்கன்னை நினைவு பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது .
பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர்களுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் , பாஜகவினர் சற்று வித்தியாசமாக ஏர்கன்னை பரிசாக கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . மேலும் பரிசாக வழங்கப்பட்ட துப்பாக்கி பாதரச குண்டுகள் வைத்து சுடக்கூடிய துப்பாக்கி எனவும் , உண்மையான துப்பாக்கி இல்லை என்றும் நிகழ்ச்சியை நடத்திய பாஜகவினர் தெரிவித்துள்ளனர் . ஆனால், தமிழகத்தில் வளர்ந்து வரும் இந்த வடநாட்டு கலாச்சாரம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.