மத்திய கல்வி நிறுவனங்களில் தாய்மொழியில் பொறியியல் கல்வியை அடுத்தாண்டே அமல்படுத்த முயற்சிப்போம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, தாய்மொழி வழிக் கற்றல் எப்போதுமே சிறப்பானது. எந்த மொழியைவிடவும் தமிழ் மொழியில் பொறியியல் கல்வி என்பது எளிமையாக ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் செயல்பாட்டுக்கு வரும் என நினைக்கிறேன்.
அதற்குத் தமிழக அரசு அனைத்து விதங்களிலும் முன் முயற்சி எடுக்கும். மத்தியக் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து தாய்மொழி வழிக் கல்விக்கான பாடத்திட்டம், உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான பணிகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளோம். அடுத்த ஆண்டே இதை அமல்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 2020-21-ஆம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி உள்ளி்ட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தாய்மொழியில் பொறியியல் படிப்பு பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துளளது குறிப்பிடத்தக்கது.