மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விரோத போக்கை கடைபிடித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விரோத போக்கை கடைபிடித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்போது, “மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பதற்குக்கடும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அனைவரையும் பாதிக்கும்.
ஒரு வகுப்பிலுள்ள 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும் எனவும், அதுவும் பகுதிநேர ஆசிரியர்தான் நியமிக்கப்படுவார் எனவும், வாரத்துக்கு 2 அல்லது 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் எனவும் தமிழ் கற்பதற்கு பல தடைகளைக் கொண்டு வந்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ் மீதும், தமிழர் மீதும் கொண்டுள்ள விரோதப்போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க விருப்பமா? என்ற கேள்வியைத் திட்டமிட்டு திணிக்கும் மத்திய அரசு, தமிழைக் கற்பிக்க மட்டும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கோருவது எவ்வகையில் நியாயமாக இருக்கும்?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 6 -ம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும், 9- ம்வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை விருப்ப பாடமாகவும் உள்ளது.
இவையெல்லாம் மேடைக்கு மேடை திருக்குறளையும், தமிழின் பெருமையும் பிரதமர் மோடி பேசுவதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற நடத்தும் நாடகம் என்பதையே உணர்த்துகிறது.
தமிழர்களின் பிறப்புரிமையான தாய் மொழிக் கல்வியைப் பெறுவதில் தடையை ஏற்படுத்தும் விதிகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பபெற வேண்டும்.
இல்லையெனில், தமிழகத்தில் மீண்டும் மொழிப் போர் வெடிக்குமென எச்சரிக்கிறேன்” என்றார் சீமான்.