மதுரையில் பள்ளி மாணவிகள் பெரியார் பேருந்து நிறுத்தத்தில் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழு விசாரணை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள இரண்டு பள்ளி மாணவிகளிடையே சண்டை உருவானது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழு மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. அதில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு மாணவிகளும் பெரியார் பேருந்து நிலையத்தில் ஓடிப் பிடித்து விளையாடியுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை அவர்கள் பேருந்து நிலையத்துக்கு வந்தபோதும், பிரச்னை உருவாகியுள்ளது. இதனால் இரண்டு பள்ளி மாணவிகளும் மோதிக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் வரும் 5-ம் தேதி பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. அதுவரை பிரச்னையில் ஈடுபட்ட மாணவிகள் பள்ளிக்கு வரவேண்டாம் என அலுவலர் ஆதி ராமசுப்பு தெரிவித்துவிட்டார். அதேபோன்று தேர்வு எழுத வரும் மாணவிகள், பெற்றோருடன் வந்து வீட்டுக்கு அவர்களுடனே திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கல்வி அலுவலர் ராம சுப்பு கூறினார்.