தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று தொடங்கிவைக்கிறார்.
அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வழங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம். டோக்கன்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன. (6-ந் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அன்று டோக்கன் வழங்கப்படாது). ஒரு நாளுக்கு 200 டோக்கன்களை அலுவலர்கள் வீடு வீடாக வந்து வழங்குவார்கள்.