தமிழகத்தில் வரும் 15ம் தேதி முதல் 3,250 டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபார்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் பார் உரிமையாளர்கள் கடும் வருவாய் இழப்புடன், பார் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். பார் கட்டட வாடகை பாக்கி மட்டுமே ரூ.405 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பார் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் பார்களை மட்டும் தொடர்ந்து மூடி வைத்திருப்பது தங்களுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த நிர்வாகிகள், மதுபார்களை திறப்பதற்கு உடனடியாக அனுமதிக்காவிட்டால், பார் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன், டாஸ்மாக் பார் உரிமையாளர்களை போனில் அழைத்து பேசினார். வருகிற 15-ந் தேதிக்குள் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள டாஸ்மாக் சங்க தலைவர் அன்பரசன், ‘‘கொரோனா காலத்தில் 9 மாதமாக பார் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த முடியாமல் உள்ளோம். அதற்கான மொத்த வாடகையையும் நாங்களே செலுத்த வேண்டி உள்ளது’’ என்றார்.
மேலும், பார் கட்டிட மாத வாடகையாக ரூ.50 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற 15-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 3,250 டாஸ்மாக் பார்களையும் திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.