திருமணத்தில் தந்தை இல்லையே என்று வருந்திய தங்கைக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி இருக்கிறார் அவரது சகோதரி..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். தொழிலதிபரான இவர் 2012ல் இறந்து விட்டார்.இவரது மனைவி கலாவதி. செல்வம் – கலாவதி தம்பதிக்கு மூன்று மகள்கள். இரண்டு மகள்களின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்த செல்வம் 3-வது மகள் திருமணத்தின்போது உயிருடன் இல்லை. இந்த நிலையில் மூன்றாவது மகள் லெட்சுமி பிரபாவுக்கும், கிஷோர் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. லெட்சுமி பிரபா, தன் திருமணத்திற்கு தந்தை இல்லையே என்று எண்ணி வருத்தமாக காணப்பட்டார்.
இதையறிந்த, லண்டனில் டாக்டராக உள்ள அவரது மூத்த சகோதரி புவனேஸ்வரி, தந்தை செல்வத்தின் உருவத்தை சிலையாக உருவாக்க முடிவு செய்து 6 லட்சம் ரூபாய் செலவில், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில், ‘ஆர்டர்’ செய்து தத்ரூபமான சிலையை உருவாக்கினர். பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த லெட்சுமி பிரபா திருமண வரவேற்பின் போது, மணமக்கள் முன், தந்தையின் முழு உருவ சிலையை புவனேஸ்வரி மேடைக்கு கொண்டு வந்து, தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதைப் பார்த்த லெட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார். சிலை முன், மணமக்கள் மாலை மாற்றி, சிலையின் காலில் விழுந்து வணங்கினர். செல்வம் சிலையுடன் சேர்ந்து நின்று திருமணத்திற்கு வந்த அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.