மாணவர்களின் நலன்கருதி என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நீட்டிக்கப்பட்டிருந்த கடைசிநாள், இன்றுடன் முடிவடைகிறது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி முடிந்துள்ளநிலையில், மொத்தம் 1,60,834 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே விண்ணப்பக்கட்டணம் செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில், கட்டணம் செலுத்திய மாணவர்கள், தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கடைசித்தேதி, கடந்த 20-ஆம் தேதி முடிவடைந்தது. எனினும், மாணவர்களின் நலன்கருதி, அதை 24-ஆம் தேதி (இன்று) வரை நீட்டித்து உயர்கல்வி துறை உத்தரவிட்டது. அதன்படி, என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசிநாள் ஆகும்.
சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தபின்பு, ரேண்டம் எண் வெளியிடப்படும். அதுகுறித்ததான அறிவிப்பை உயர்கல்வித்துறை இன்று தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.