தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் செயல்படவுள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு 50 மற்றும் அதற்கு குறைவான வயதுடைய நபர்கள் மட்டுமே செல்ல அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகளையும் அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு சிலவற்றிற்கு மட்டும் தற்போது வரை தடை உத்தரவு நீடித்து தான் உள்ளது. அதிலும் குறிப்பாக செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசு ஆகஸ்ட் 5 முதல் திறக்க உடற்பயிற்சி நிலையங்களை திறக்க அனுமதி அளித்திருந்தாலும் தமிழகத்தில் அதன் தடை நீடிப்பு இருக்கத்தான் செய்கிறது.
இந்த சூழலில் தான், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முன்வைத்தனர்.
இதனையடுத்து வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் ஆனால் அங்கு 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்கள் தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை பின்பற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் எனவும் அதனை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.