ஜியோ நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான விலை காரணமாக டேட்டா பயன்பாடு இந்தியாவில் கனிசமாகவே இருந்த நிலையில், மலிவான விலை விலையில் 4ஜி சேவையை வழங்கி இந்திய தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது ஜியோ நிறுவனம். 2016ம் ஆண்டு முதல் வர்த்தக அடிப்படையில் 4ஜி சேவையை வர்த்தக அடிப்படையில் தொடங்கிய ஜியோ நிறுவனம், தற்போது இந்திய செல்போன் சந்தையில் அதிக சந்தாதாரர்களை கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில்,பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்த, இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 2021 ஆண்டின் இரண்டாவது பாதியில் நாட்டில் 5 ஜி சேவையை ஜியோ தொடங்க இருப்பதாக கூறினார். இதனால் இந்தியாவில் 5ஜி புரட்சி உண்டாகும் எனவும், உள்நாட்டிலேயே உருவாக்கம் பெற்ற நெட்வொர்க், வன்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் 5ஜி சேவை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையிலான ஆன்ட்ராய்ட் செல்போனை ஜியோ உருவாக்கி வருவதாகவும், வரும் மாதங்களில் அந்த போன்கள் சந்தைக்கு வருமென்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 2ஜி சேவைக்குள், இன்னமும் 30 கோடி மொபைல் சந்தாதாரர்கள் சிக்கியுள்ளனர். இந்த வறிய மக்களுக்கு மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்கள் இருப்பதை உறுதி செய்ய அவசர கொள்கை நடவடிக்கைகள் தேவை, இதன் வழியாக அவர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்வது உட்பட பல வகையாக டிஜிட்டல் பொருளாதாரத்தில் தீவிரமாக பங்கேற்கலாம் என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.
மேலும், ஜியோ நிறுவனத்தின் 5ஜி போன் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் சந்தைக்கு வருமெனவும், விலை 4 ஆயிரம் ரூபாயாக இருக்கக்கூடுமென என தகவல்கள் தெரிவிக்கின்றன.