ஒரு வருட கால அளவீட்டிற்குப் பிறகு, எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரத்தை நேபாள அரசு அறிவித்துள்ளது.
உலகின் உயர்ந்த சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 8,848 மீட்டர் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே. ஆனால், 2015ல் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்குப் பிறகு 8,848 மீட்டர் உயரம் உண்மையான நீளமாக இருக்காது என, நேபாள மற்றும் சீன அரசுகள் கூறின. இந்த கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளவிட நேபாளம் முயன்றது.
மலையின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாள அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நியமித்த அதே வேளையில், சீனாவும் திபெத்திய பக்கத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிடும் பணியைத் தொடங்கியது. பின்னர், 2019’ல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின் போது, இரு நாடுகளும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தனது.
இதையடுத்து, ஒரு வருட கால அளவீட்டு பணிக்கு பின்னர், நேபாளம் இன்று புதிதாக அளவிடப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் உயரம் அதிகரித்து 8,848.86 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்த 1954-ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.