மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை பெற இனி ஆதார் எண் கட்டாயம் என்று யு.ஐ.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது.
யு.ஐ.டி.ஏ.ஐ எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம்( UIDAI), ஆதார் அட்டைகளை விநியோகித்து வருகிறது. இந்த ஆணையத்தின் புள்ளிவிவரத்தின் படி நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99% பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யு.ஐ.டி.ஏ.ஐ சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு கடந்த 11ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. அதில், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். அட்டை கிடைக்கும் வரை விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுடன், அரசு அளித்துள்ள அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் சேர்த்து சமர்ப்பித்து உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஐடி எனப்படும் ’விர்ச்சுவல் ஐடென்டிபையர்’ என்ற சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதில், ஆதார் எண் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்தால் அவர்களுக்கு 16 இலக்க தற்காலிக எண் வழங்கப்படும். அந்த எண்ணை தெரிவித்து சேவையை பெற்றுக்கொள்ளலாம்.