புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள் போன்றவற்றை நிறுத்தி வைக்க, எச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதோடு, நாட்டின் அதிக லாபம் ஈட்டும் தனியார் வங்கியாகவும் எச்டிஎப்சி பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. டிஜிட்டல் வங்கி சேவை, எளிய கடன் வழங்கும் முறை போன்றவை இந்த வங்கியின் வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைக்காகவே மிகுந்த நன்மதிப்பை கொண்டுள்ள எச்டிஎப்சி வங்கி, தற்போது அதே காரணத்தால் சிறிய சரிவை சந்தித்துள்ளது.
புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்குமாறு தங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், வங்கியின் டிஜிட்டல் சர்வர்களில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு ஆளானதால், இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோளாறுகள் சரி செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சம்மதம் பெற்று, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள வங்கி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
அதே நேரம் ரிசர்வ் வங்கியின் உத்தரவால் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகள் மற்றும் இதர டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், எச்டிஎப்சி வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.