கால்நடைகளில் பெரியம்மை அல்லது தோல் கழலை நோய் பரவும் அபாயம் உள்ளதால் கவனத்துடன் இருக்குமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரியம்மை நோய் என்பது ஈ அல்லது கொசு போன்ற கடிக்கும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இருந்து ஆரோக்கியமான கால்நடைகளுக்கு பரவக்கூடிய வைரஸ் நோயாகும். பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல், உடல் முழுவதும் சிறு கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
நோயுற்ற மாடுகளில் கடுமையான காய்ச்சல், உடல்சோர்வு, தீவனம் உண்ணாமை, கண்ணில் நீர் வடிதல், தாடை வீக்கம், வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கம், இரு முன்னங்கால்களுக்கு இடையில் உள்ள நெஞ்சு பகுதியில் வீக்கம், மூக்கில் சளி ஒழுகுதல், பின்னங்கால் மற்றும் தொடை பகுதியில் வீக்கம் நிணநீர் சுரப்பிகள் பெரிதாக வீங்கி காணப்படும்.
மேலும் பிறப்பு உறுப்புகளில் வீக்கம், முகம், கால், உடம்பு என உடலின் எல்லாப் பகுதிகளிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டி முடிச்சுகள் போன்று தோன்றுதல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அது நிச்சயம் பெரியம்மை நோய் தான். சில சமயங்களில் கொப்புளங்கள் பெரிதாகி உடைந்து புண்களாக மாறி அவற்றிலிருந்து இரத்தம் மற்றும் சீழ் வடியும். இப்ப புண்களில் புழுக்கள் உண்டாகும்.
இந்த வைரஸ் தாக்கினால் மடி மற்றும் காம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, சில சமயம் மடி நோயாக மாறும் இயல்புடையது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி வெகுவாக குறையும். நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து பிற மாடுகளுக்கு வேகமாக தொற்று பாதிப்பை ஏற்படுத்தும்.கன்றுகளில் நோயின் வீரியம் அதிகமாக காணப்படும். குறிப்பாக நலிந்த மற்றும் குடற்புழுவினால் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டிகள் இந்நோயின் தாக்கப்பட்டால் இறப்பு கூட ஏற்படலாம்.
நோய்வாய்பட்ட கிராமத்தில் இருந்து மாடுகளை வாங்கி வருதல் தான் இந்த நோய் அதிகம் பரவ காரணம் என மண்டல கால்நடை இயக்குநர் டாக்டர்.பொன்வேல் கூறினார் மேலும் இந்த நோய் பாதிப்பில் இருந்து கால்நடைகளைகாக்க சில சிகிச்சை முறைகளையும் கூறினார்.
வாய்வழி மூலிகை மருந்தாக ஒரு முறை கொடுக்கத் தேவைப்படும் அளவு வெற்றிலை -10 எண்ணிக்கை, மிளகு -10 கிராம், உப்பு -10 கிராம், வெல்லம் – தேவையான அளவு. மேற்கூறியவற்றை ஒவ்வொரு முறையும் புதிதாக அரைத்து சிறிது சிறிதாக நாக்கில் தடவிக் கொடுக்க வேண்டும். முதல் நாள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறையும் பிறகு இரண்டாம் நாளிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் இரண்டு வாரங்கள் கொடுக்க வேண்டும்.
தோல் காயத்திற்கான வெளிப்பூச்சு மூலிகை மருந்து, குப்பைமேனி இலை, அம்மான் பச்சரிசி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை ஆகியவை தலா ஒரு கைப்பிடி அளவு. மஞ்சள் தூள் -20 கிராம், பூண்டு 10பல், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 500 மி.லி. மேற்கூறியவற்றை அரைத்து எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்த பின் ஆற வைத்து அந்த எண்ணெயை பருத்தி துணியில் தொட்டு காயங்கள் மீது அடிக்கடி ஒத்தடம் தர வேண்டும்.
கண்டிப்பாக தேய்க்கக் கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து கால்நடைகள் மெல்ல மெல்ல மீளும். இல்லை என்றால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கூறினார் அதாவது “கொட்டகை மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கொசுக்கள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்தலாம், பாதிக்கப்பட்ட மாடுகள் மற்ற மாடுகளிலிடமிருந்து தனிமைப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். 5 கிலோ வேப்பங்கொட்டையை ஒரு வாளித் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி 200கிராம் சோப்பை கலக்கவும்.
அந்த தண்ணீருடன் 100லிட்டர் வரும் வரை கூடுதல் தண்ணீர் சேர்த்து, பின் அத்தண்ணீரை மாடுகளின் மீது அல்லது கொட்டகைகளில் தெளிக்கலாம் இதனால் ஈ மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தப்படும்.” என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.