சீனாவின் உயிரியல் பூங்கா ஒன்றில் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று பூங்கா காவலரைக் கரடிகள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறிச் சாப்பிட்ட கொடூர சம்பவம் பார்வையாளர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதைப் பார்வையாளர்கள் பாதுகாப்பான வாகனங்களிலிருந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பார்வையாளர்கள் விலங்குகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு கரடிக் கூட்டம், அப்பூங்காவில் பணியாற்றும் காவலர் ஒருவரைச் திடீரென்று சூழ்ந்துக்கொண்டு தாக்கியுள்ளன.
இதனை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள், பயத்தில் அலறி உதவிக்காகக் கூச்சலிட்டுள்ளனர். ஆனால், உதவி கிடைப்பதற்கு முன்னரே அந்தக் காவலரைக் கொன்று கரடிகள் சாப்பிட்டுள்ளன.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் பலரையும் பதறவைத்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பூங்காவின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.