அமெரிக்காவின் புதிய விசா விதிமுறைகளால் அங்கு கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் அந்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டால், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும், அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளால் அமெரிக்காவில் கல்வி பயிலும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். அமெரிக்க அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி), ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. இந்த வழக்கிற்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கார்னெல் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவை வளர்த்ததில் இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி பரிமாற்றம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா அமெரிக்க அரசியல் விவகார செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் அறிவிப்பால் இந்திய மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்து டியூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஷோபனா முக்கர்ஜி பிடிஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “நீண்டகால திட்டங்களுடன் அமெரிக்கா வந்த இந்திய மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு பலத்த அடியாக அமையலாம். கொரோனாவால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் நான் இங்கேயே தங்கிவிட்டேன். எனக்கு இந்தியா செல்வதற்கும் விருப்பமில்லை. அங்கு சென்றால் நேர மாற்றங்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது கடினம். ஆனால் நான் தற்போது இங்கிருப்பது சட்டத்திற்கு புறம்பாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருப்பதால் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புக்கு மாறியுள்ளன. இந்த சமயத்தில் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை வெளியேறச் சொன்னால் அவர்கள் கொரோனா நெருக்கடிக்கு இடையே என்ன செய்வார்கள் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது. எனவே, அமெரிக்க அரசு தனது உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.