இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ஆந்திர உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் அதிகரித்து வரும் பாதிப்புகளால் இந்தியா கொரோனா பாதிப்பில் நாள்தோறும் புதிய உச்சம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு புதிய உச்சம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 13, 165 பேருக்கும், ஆந்திராவில் 9,742 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 977 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோரின் எண்ணிக்க்கை 53,866 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும், புதிய சாதனையாக சுமார் 9 லட்சத்திற்க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை சுமார் 3.27 கோடியை கடந்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20,96,665 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 6,86,395 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.