அரசு கவின்கலைக்கல்லூரி மற்றும் சிற்பக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் அடுத்த மாதம் 7-ந் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கவின்கலை, சிற்பக்கல்லூரி
கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் நான்கு அரசு இசைக்கல்லூரிகளும், சென்னை மற்றும் கும்பகோணத்தில் அரசு கவின் கலைக் கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் அரசினர் கட்டிட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில்
2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மாதம் 27-ந் தேதி முதல் கடந்த 17-ந் தேதி வரை கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
கால அவகாசம்
இந்த நிலையில், +2 தேர்ச்சி முடிவுகள், 10ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் பெற்று விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணபிப்பதற்கு அடுத்த மாதம் 7-ந் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது எனவும், அரசு இசைக் கல்லூரிகளில் இசையாசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும், இதனை கலை பண்பாட்டுத் துறை இணையதள முகவரியலும் (www.artandculture.tn.gov.in) மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.
சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 7-ந் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பின்னர் தெரிவிக்கப்படும். இதனை கலை பண்பாட்டுத் துறை இணையதள முகவரியலும் மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.