ஜி.எஸ்.டி செலுத்துவதில் இருந்து ரூ.40 லட்சம் வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, ஆய்வுக்குழுக்கள் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனைப்படி, விதிக்கப்பட்ட வரி விகிதங்களில் அவ்வப்போது மத்திய அரசு மாற்றங்கள் செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போதுமத் திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முன்னதாக ரூ.20 லட்சம் வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.1.5 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த திட்டத்தை பயன்படுத்தி 1 சதவீதவரி மட்டும் செலுத்தலாம். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த உடன் பெரும் எண்ணிக்கையிலான பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டது. தற்போது ஆடம்பர பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மொத்தம் 230 பொருட்கள் மீது 28 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 200 மீது வரி குறைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டு உள்ளது.
மேலும், வீட்டு வசதி துறைக்கு குறிப்பிடத்தகுந்த நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது, அதற்கு 5 சதவீத வரியின் கீழ் உள்ளது. மிகக்குறைந்த விலையிலான வீடுகள் மீதான ஜிஎஸ்டி 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி துவங்கப்பட்டதில் இருந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் சுமார் 65 லட்சம் பேர் வரி செலுத்திய நிலையில், தற்போது 1.24 கோடி பேர் வரி செலுத்தி வருகின்றனர். ஜிஎஸ்டியில் உள்ள அனைத்து நடைமுறைகளும் முழுமையாக தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 50 கோடி ஜிஎஸ்டி தாக்கல் ஆன்லைன் செய்யப்பட்டு 131 கோடி இ-வே பில் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




