பயிர்களை பறவைகள் வீணாக்கிவிடும் என்பதற்காக அதனை விரட்டும் பல விவசாயிகளுக்கு மத்தியில், தன் அரை ஏக்கர் நிலத்தில் தானியங்களை பயிரிட்டு பறவைகளுக்கும் பசியாற்றி வருகிறார் கோவையை சேர்ந்த இயற்கை விவசாயி முத்துமுருகன்.
இயற்கை நமக்கு கிடைத்த சிறந்த அரியாசனம். அதனை வளர்ச்சி என்ற பெயரில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம். ஆனால் அதற்கு சற்றும் மாறுதாலாக தன் வாழ்வில் இயற்கையையும், பறவைகளையும் மகிழ்வோடு காப்பாற்றி வருகிறார் 62 வயதான கோவையை சேர்ந்த இயற்கை விவசாயி முத்து முருகன். இத்தகவலையடுத்து எந்த வகையில் இயற்கையை காப்பாற்றுகிறார் என்ற ஆவல் அளப்பரியவே அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக கோவை நகரிலிருந்து தொண்டாமுத்தூர் நோக்கி சென்றோம்.
இயற்கை எழில் சூழ்ந்த கோவை தொண்டாமுத்தூர் பகுதியில், மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்பட்ட விவசாயி முத்து முருகன், தன்னுடைய 2 அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயித்தினை செம்மையாக செய்து கொண்டிருந்தார். அவரை நோக்கி செல்லும் போதே பறவைகளின் சத்தம் நம்மை ஏதோ புதிய அனுபவத்திற்கு எடுத்துச்சென்றது. எப்படியாவது வருமானம் ஈட்டி விட வேண்டும் என்ற நோக்கில் வேலை செய்துவரும் விவசாயிகளுக்கு மத்தியில் தன் உழைப்பினை பறவைகளுக்கும் செலவு செய்து வருகிறார் இந்த விவசாயி.
எப்படி தெரியுமா? தன்னுடைய 2 அரை ஏக்கர் நிலத்தில், அரை ஏக்கரை பறவைகளுக்காகவே ஒதுக்கியுள்ளார். அதில் கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளை பயிரிட்டு காட்டுப்பறவைகள் வந்து உண்பதை மகிழ்வோடு பார்த்து ரசிக்கிறார். தினமும் 100க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு பசியாற்றுவது அளப்பெரிய சந்தோஷம் எனவும், இயற்கையில் கிடைத்த பொருட்கள் இயற்கையோடு இயைந்து வாழும் பறவைகளுக்கும் சொந்தமாக்குவது தவறில்லை. அதற்காக செலவிடுவது மகிழ்ச்சி தானே என்கிறார் இந்த விவசாயி முத்து முருகன்..
பறவைகள், இயற்கை, விவசாயம் இவை தன் சந்தோஷத்தின் மறுபக்கம் என்று நினைத்து வாழ்ந்து வரும் இந்த விவசாயினைப்போன்று கொஞ்சம் சிறிது காலம் நாமும் நம்முடைய வாழ்நாளில் வாழ்ந்து விட்டால் நிச்சயம் நம்மோடு இயற்கையும் பயணிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றே கூறலாம். மேலும் இதுப்போன்ற விவசாயிகளின் செயல்களை வளரும் தலைமுறையினர் முன்னெடுக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது.