தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் இன்று தனது 21ஆவது திருமண நாளை மனைவி சங்கீதா உடன் இணைந்து கொண்டாடியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். கமல் ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அடுத்தவரிசையில், அதிக படங்களில் நடித்தவர் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். தற்போது வரை 64 படங்களில் நடித்துள்ளார். இவரது 64ஆவது படமான மாஸ்டர் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் இன்று தங்களது 21ஆவது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். டுவிட்டரில், #SangeethaVijay என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, தளபதி விஜய்யின் 21 ஆவது திருமண நாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் விஜய் மற்றும் சங்கீதாவின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில், காதலுக்கு மரியாதை கொடுத்த தளபதி, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். காதலுக்கு மரியாதை கொடுப்பவர். ஆம், காதலித்து தான் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
பூவே உனக்காக படம் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் சென்னையில் இருந்தார். அப்போது, விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா லண்டனிலிருந்து அவரைப் பார்ப்பதற்காக சென்னை வந்தார்.
இலங்கையைச் சேர்ந்த சங்கீதாவின் தந்தை லண்டனில் தொழிலதிபராக செட்டிலாகி இருப்பவர். ஆதலால், லண்டனில் இருந்து சங்கீதா விஜய்யைப் பார்ப்பதற்காகவே சென்னைக்கு வந்துள்ளார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.
முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப் போய்விட்டது. பின்னர், தனது வீட்டிற்கு சங்கீதாவை விஜய் அழைத்துச் சென்றுள்ளார். விஜய்யின் பெற்றோருக்கு, சங்கீதாவை மிகவும் பிடித்துப் போக, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாகவே சங்கீதாவிடம் விஜய்யை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு சங்கீதாவும் விருப்பம் இருக்கிறது என்று கூறவே, குடும்பத்தோடு லண்டன் சென்று சங்கீதாவின் பெற்றோரிடம் பேசி முடித்துள்ளனர். அதன் பிறகு கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விஜய் சங்கீதா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது விஜய் மற்றும் சங்கீதா ஜோடிக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர்.
சஞ்சய் கனடாவில் உள்ள கல்லூரியில் திரைப்படம் பற்றிய படிப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக அண்மையில், சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார். திவ்யா சாஷா, சென்னையில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
விஜய்யின் 21 ஆவது திருமண நாளை முன்னிட்டு அவரது திருமண அழைப்பிதழ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில், விஜய், தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.
தளபதி 65 படம் முழுக்க முழுக்க புதிய கதையைக் கொண்டு உருவாக இருக்கிறது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




