மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் மற்றும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ், நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரான இயக்குநர் சிநேகா பிரிட்டோ இருவருமே கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்தார்கள்.
சிநேகா பிரிட்டோ ‘சட்டம் ஒரு இருட்டறை 2’ என்னும் படத்தை இயக்கினார். இவர் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் ஆவார். சேவியர் பிரிட்டோ மிகப்பெரிய தொழிலதிபர். ஆகாஷ் – சிநேகா பிரிட்டோ இருவரின் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடந்தது. குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
இது தொடர்பாக அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருவரும் இணைந்து கூறியதாவது:
“நாங்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.தற்போதைய சூழ்நிலையில் இந்த திருமணத்தை நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், மிக விரைவில் நிலைமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரம்மாண்ட வரவேற்பு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என கூறினார்கள்.