கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி.யும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எச்.வசந்தகுமார் மறைவு
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராகவும் பதவிவகித்து வந்தவர் எச்.வசந்தகுமார். அவருக்கு வயது 70. உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசின் தாக்கத்திற்கு தமிழகத்திலும் பல்வேறு தலைவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், எச்.வசந்தகுமாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10-ந் தேதி அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில், இன்று மாலை சுமார் 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் உயிரிழந்தார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கை வரலாறு
எச்.வசந்தகுமார் கன்னியாகுமரியில் உள்ள அகஸ்தீவரத்தில் 1950ம் ஆண்டு ஹரிகிருஷ்ணன்-தங்கம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 14-ந் தேதி பிறந்தவர். வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், தனது கடுமையான உழைப்பின் மூலம் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை தொடங்கினார். பின்னர், தமிழகத்தின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்தார். தற்போது அவரது நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 64 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், பின்னர் படிப்படியாக காங்கிரசின் முக்கிய தலைவராக உயர்ந்தார். பின்னர், கடந்த 2006ம் ஆண்டு நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார். பின்னர், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்றார்.
தலைவர்கள் இரங்கல்
அவரது மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த எச்.வசந்தகுமாருக்கு நடிகர் விஜய் வசந்த், வினோத்குமார் என்ற இரு மகன்களும், தங்கமலர் என்ற மகளும் உள்ளனர். தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் சகோதரர், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் சித்தப்பா ஆவார். அவரது மறைவை முன்னிட்டு காங்கிரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே திருவல்லிக்கேணி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா வைரசால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.