பொது போக்குவரத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்த நிலையில் வருகின்ற 7-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை:
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து பொது போக்குவரத்துக்கு வருகிற 7-ந் தேதி முதல் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.இந்த நிலையில் மாநிலத்துக்குள் சுமார் 3 ஆயிரம் ஆம்னி பஸ்கள் ஊரடங்குக்கு முன்பு இயங்கி வந்தனர்.அந்த பஸ்களும் வருகின்ற 7-ந் தேதி முதல் ஆம்னி பஸ்கள் இயங்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் அவைகள் இயங்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள் .அதில் சில குறிப்பிட்ட முடிவுகள் எடுத்தனர்.
இதுகுறித்து சங்க பொதுசெயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது:
கடந்த 5 மாத காலமாக பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.ஒரு பஸ்சின் உரிமையாளர் அதை எடுத்து இயக்குவதற்கு குறைந்தது ரூ.2 லட்சமும்,கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சாலை வரிரூ. 2 1/2 லட்சம் என மொத்தம் ரூ.4 1/2 லட்சம் வரை தேவைப்படுகிறது. பஸ்களை இயக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் இருந்தும்,இயக்கமுடியாத நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம். அதனால் வருகிற 7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு, 2 காலாண்டு சாலை வரியை முழுவதும் தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.




