நடிகர் ரஜினிகாந்த் வரும் நவம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என அவருக்கு நெருக்கமானவரும் மூத்த பத்திரிகையாளருமான கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தமிழகத்தில் விவாதங்கள் நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை என அவரது ரசிகர் பெருமக்கள் போஸ்டர்கள் ஒட்டி ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த மார்ச் 12-ம் தேதி சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாற்றம் வேண்டி மக்களிடம் எழுச்சியும், அலையும் வரட்டும் அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் செய்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய போது, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை எனத் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தனக்கு கிடைத்த தகவல் படி, ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார் என்றும் இதை வேடிக்கைக்காக சொல்லவில்லை எழுதியே வைத்துக்கொள்ளுமாறும் சவால் விடுத்துள்ளார். ரஜினிகாந்தின் ஆலோசகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநிவாஸிடம் கூட ரஜினிகாந்த் இந்த தகவலைக் கூறியிருக்கலாம் எனவும் தோன்றுகிறது.
மேலும், கொரோனா விவகாரம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற்றிருக்கும் என்றும் அதற்கான முடிவை அவர் ஏற்கனவே எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ள இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.