உங்கள் வீட்டில் யாருக்காவது ஜலதோசம் பிடித்தால் இந்த சுக்குமல்லிமிளகுக் காப்பியைத் தயார்செய்து கொடுங்கள். மூன்று நாட்களில் ஜலதோசம் சரியாகிவிடும்.

எப்போதும் இருமிக்கொண்டே இருப்பவர்களுக்கு இந்தச் சுக்குமல்லிமிளகு காப்பியைத் தொடர்ந்து கொடுத்து வந்தால்,இருமல் காணாமல் போய்விடும்..சரி வாருங்கள் இதனை எப்படித் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
சுக்கு- ஒன்றிரண்டு பெரிய துண்டுகள்
மல்லி- இரண்டு ஸ்பூன்
மிளகு- ஒரு ஸ்பூன்
நொறுக்கிய கருப்பட்டி-தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் சுக்கினைத் தட்டி சிறிது சிறிதாக நொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப்பின் அதனோடு மல்லி மற்றும் மிளகினைச் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு கொள்ள வேண்டும்.
அதற்கும் பின் கோப்பையில் இரண்டு கப் அளவு தண்ணீரை ஊற்றி, அதனோடு ஒரு ஸ்பூன் சுக்குமல்லிப் பவுடரையும், தேவையான அளவு நொறுக்கிய கருப்பட்டியையும் கலந்து கொதிக்க வைத்து கொஞ்சம் தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதனை வடிகட்டிக் குடிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குடித்து வந்தால், இருமல் ஜலதோசம் குணமாகிவிடும்.

பின்குறிப்புகள்
“அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று சொல்வதைப் போல் சுக்கு உடலுக்கு நல்லதேயென்றாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், வயிற்று வலியை உண்டு பண்ணும் அத்தோடு மட்டுமல்லாமல் சுக்கு மலத்தை இறுக்கும் தன்மையுடையது என்பதால் சுக்கினைக் கவனத்துடன் பயன்படுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் சுக்குக் காப்பியைக் குடிக்காதீர்கள்!
இப்போது கொரோனா போன்ற பிரச்சனைகள் இருப்பதால், ஜலதோசம், இருமல் அதிகமாக இருந்தால் இதுபோல் வீட்டு வைத்தியங்கள் மட்டும் செய்து கொண்டு அலட்சியமாக இருக்காமல், உடனே மருத்துவரை அணுகி தேவையான மருந்து மாத்திரைகளையும் இதனோடு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.




