சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழை நீரில் அறந்து கிடந்த மின்வயரை மிதித்த 35 வயது பெண் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இன்று காலை பலியாகினார்.

சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அலிமா(35). இவரது கணவர் ஷேக் அப்துல் மற்றும் ஒரு மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர் புளியந்தோப்பு நாராயணசாமி தெரு பகுதியில் உள்ள சாகிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு அலிமா வீட்டு வேலை செய்வதற்காக நாராயணசுவாமி தெரு வழியாக சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மழை பெய்து சாலையின் நடுவே தண்ணீர் நின்றதால் ஓரமாக சென்றார். அவ்வழியாக வாகனங்கள் சென்று வந்தன. அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று மின்சார வயர் அறுந்து கிடப்பதாக காலை முதல் அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் அளித்து வந்த நிலையில் அவர்கள் யாரும் வராததால் இன்று ஒரு உயிர் பறிபோனது என மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
பூமியில் புதைந்த மின்சார வயர் மழை நீரால் மேலெழும்பி அறுந்து கிடந்ததால் இது போன்ற விபரீதம் நடைபெற்றது. அந்த பெண் இறந்தபிறகு மின்சார வாரியத்திடம் கூறியும் அவர்கள் அலட்சியமாக இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அலிமா இறந்த சம்பவம் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது.




