– சித்ரா
அடுப்படியில் மதிய உணவை தயார் செய்வதில் பம்பரமாய் சாந்தி வேலை செய்ய, உள்ளே நுழைந்த காயத்ரி…
“சாந்தி! அரிசியை நல்லா கழுவினையா?”
“நல்லா கழுவித்தான் போட்டேன் காயத்ரி அக்கா” சாந்தி பதில் கூறியபடி, நறுக்கிய காய்கறிகளை சாம்பார் வைக்க எடுத்து பாத்திரத்தில் போட்டவளை…
“காயெல்லாம் நல்லா கழுவிதான போட்ட?” காயத்ரி கேள்வியை தொடர…
“நல்லாதான் கழுவி போட்டேன் அக்கா!. எதுக்கு இவ்வளவு கேள்வி”
“இதபாரு சாந்தி. பெரியவங்களுக்காக சமைக்கிறது. அதுக்காகதான் கேட்டேன். நாளைக்கு ஏதாவது குத்தம் கண்டுபிடுச்சா, அப்புறம் விசாலாட்சியம்மா கிட்ட என்னாள பதில் சொல்ல முடியாது. உனக்கு தெரியாதா?” என்றாள் காயத்ரி
“எனக்கு தெரியும் அக்கா. நீங்க பயப்படாதீங்க. எல்லாம் சுத்தமா கழுவிதான் போட்டு சமைக்கிறேன்;” என்றாள் சாந்தி.
“இன்னிக்கு கடைசி சனிக்கிழமை… டாக்டர் செக்கப் பண்ண வர நாள். உனக்கு தெரியுமா?”
“தெரியும். அவர்கூட ஃபோன் பண்ணியிருந்தார். சாயங்காலம் ஆறு மணிக்கு வரதா சொன்னார்” சாந்தி கூற…
“சரி சாந்தி! சமையல் முடிஞ்சவுடனே கூப்பிடு. நான் போய் விசாலாட்சி அம்மாவ பாத்துட்டு வரேன்”
கந்தலான கோணிப்பையை தோளில் சுமந்துக்கொண்டு, பேப்பர் பொறுக்க அந்த சாலையெங்கும் திரிந்துக் கொண்டிருந்தான் பாபு. அந்த முதியோர் காப்பகத்தின் குட்டிச் சுவற்றை சுற்றி சுற்றி வந்தவனுக்கு, இங்கொன்றும் அங்கொன்றுமாய் பேப்பர் கிடைக்க, மகிழ்ச்சியோடு அவற்றை சேகரிக்கத் தொடங்கினான்.
“பாபு! டேய் பாபு!..” அழைப்புக் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். அந்தக் காப்பகத்தின் உள்ளே இருந்து அழைத்தது காயத்ரிதான்…
“என்னக்கா?” என்றவாறு காப்பகத்தின் கேட்டின் அருகே வந்தவனைப் பார்த்து…
“ஏண்டா பாபு! இன்னிக்கு வசூல் சரியில்லையா?” காயத்ரி கேட்டவுடன், ஒருவித சலிப்போடு தலையை தொங்கப் போட்டவனைப் பார்த்து…
“ஒரு நிமிஷம் இருடா” என்று உள்ளே சென்று, பழைய செய்தித்தாள் கட்டு ஒன்றைக் கொண்டு வந்துக் கொடுத்து…
“இந்தா பாபு. இதை எடைக்கு போட்டு காசு வாங்கிக்க” என்று கொடுத்தவுடன், அதை வாங்கிப் பார்த்துவிட்டு
“அய்யோ அக்கா. இந்த பேப்பரெல்லாம் நல்லா இருக்கு. இத நான் வாங்கினா உங்களுக்கு காசு கொடுக்கணுமே. அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க” என்றவுடன்…
“பரவாயில்ல. இத எடைக்கு போட்டு நீயே காசு வாங்கிக்க” என்றவுடன், மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு விடைபெற்றவன்… அந்த வீதியை கடந்து செல்லும்போது, அவனுடைய சக பேப்பர் எடுக்கும் நண்பன் குமார் தென்பட…
“டேய் குமாரு. எங்கூட வாடா. நான் இப்ப பெரிய ஆஸ்பத்திரி பக்கம்தான் போறேன்” என்றவுடன்,
“அய்யே. அங்க ஒரே மருந்து நாத்தம்தான் இருக்கும். வெறும் பாட்டிலும், மருந்து அட்டை பெட்டி குப்பைத்தான் கெடைக்கும். நா கடைவீதி பக்கம் போறேன்” என்றவாறு நடையைக் கட்டினான் குமார்.
அரசு மருத்துவமனை. வெடிப்புகள் நிறைந்த நீண்ட சுவர். பிரம்மாண்டமாய் இரண்டு வேப்ப மரங்கள், அந்தச் சுவர் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. நீண்ட சுவற்றின் கடைசியில் ஓரமாய் சில ஓட்டைகளோடு குப்பைத்தொட்டி. உள்ளேக் கிடக்கும் குப்பைகளைவிட, வெளியே சிதறிக் கிடந்தது ஏராளம்.
சிதறிக் கிடந்த குப்பைகளைப் பார்த்ததும், மகிழ்ச்சியோடு ஓடி அவற்றை ஒவ்வொன்றாய் சேகரித்து வேகமாய் பையில் திணிக்கத் தொடங்கினான் பாபு. காலி மருந்து பாட்டில்களும், மருந்து அட்டைப் பெட்டிகளோடு அதன் வாடையும் சற்று தூக்கலாவே இருந்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வேண்டிய குப்பைகளை அள்ளினான்.
குப்பைத் தொட்டிக்குள் கைகளை விட்டு உள்ளே கலைத்து தேடத் தொடங்கினான். தொடர்ந்து தேடும்போது… மெல்ல அந்தக் குப்பைகள் அசைந்ததை கவனித்தவன்… கொஞ்சம் ஆழமாய் கலைத்துவிட்டுப் பார்த்தவன், அதிர்ந்துபோனான். உள்ளே ஒரு குழந்தை இருப்பதைப் பார்த்தவனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தவனுக்கு, குழந்தையை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. குழந்தையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, ஒரு பேப்பரை வைத்து மறைத்துக்கொண்டு, தான் கொண்டு வந்த கோணிப்பையோடு… அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினான்.
குழந்தையோடு உள்ளே வந்த பாபுவைப் பார்த்தவுடன் பதற்றத்தோடு…
“டேய் பாபு! ஏதுடா கொழந்த? எங்கிருந்து தூக்கிட்டு வந்த?” பாபுவின் அம்மா சரசு…
“அம்மா! நா பெரிய ஆஸ்பத்திரி பக்கம் பேப்பர் எடுக்கப் போகும்போது, குப்பத்தொட்டிக்குள்ள இந்த குழந்தை இருந்திச்சும்மா. அதான் நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன். நாமளே வளக்கலாம்மா” என்றான் கெஞ்சலோடு
“அய்யோ பாவிப்பயலே! அப்படியெல்லாம் நாம வளக்க முடியாது. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும்டா. உனக்கு எப்படிதான் சொல்லி புரியவெக்கறதுனு தெரியலையே” சரசு புலம்பினாள்.
இரவு நேரம்…
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவன், மனமெங்கும் குழந்தையின் நினைவே ஓடியது. எழுந்து அருகே எட்டிப்பார்த்தான். குழந்தை அயர்ந்து தூங்கியதைக் கண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டான். வெளியே குசுகுசுவென சரசு யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், கதவருகே மெல்ல வந்து அவர்கள் பேசுவதைக் கேட்க காதுகளைத் தீட்டினான்.
“இதப்பாரு சரசு! இந்தக் கொழந்தைய வெச்சு நீ என்ன செய்யப்போற?” குப்பம்மா கேட்க
“அதான் குப்பம்மா. என்ன பண்றதுனு தெரியல. நாமலே வளர்க்கலாம்னு அந்தப் பயபுள்ள அடம் பிடிக்கிறான்”……
“அப்படி ஏதாவது செஞ்சா போலிஸ் கேஸாயிடும். அதனால எங்கிட்ட கொடு. உனக்கு ஐயாயிரம் தரேன்”, குப்பம்மா கூறியவுடன்
“என்னது ஐயாயிரமா?” என்று வாயை பிளந்தவள்…
“சரி. இந்த கொழந்தயை வெச்சு நீ என்ன செய்யப்போற?” சரசு கேட்க
“அதப்பத்தி நீ கவலைப்படாதே. காலைல பாபு போன பின்னாடி, பணத்தோட வரேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள் குப்பம்மா. இவர்கள் பேச்சைக்கேட்டு அதிர்ந்த பாபு, மெல்ல வந்து படுத்துக்கொண்டு யோசிக்கத் தொடங்கினான். பாப்பாவை இவங்க விக்கப் போறாங்களா? குழந்தை அருகே வந்து சரசு படுத்துக்கொள்ள ,அவள் அயர்ந்து உறங்கும் வரை காத்திருந்தான்.
அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக் கொண்டவன், மெல்ல குழந்தையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டு வெளியே வர, மெல்லிய சாரல் மழை பெய்துக் கொண்டிருந்தது. அவசரமாக உள்ளே சென்று ஒரு கோணிப்பையை தலைக்கு போட்டுக் கொண்டு, மார்போடு குழந்தையை வைத்து மழை விழாதவாறு கோணிப்பையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, அந்த இருட்டில் நடக்கத் தொடங்கினான்.
“காயத்ரி அக்கா! காயத்ரி அக்கா!” கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விளக்கை போட்டு கதவைத் திறக்க, வெளியே பாபு மழையில் நனைந்து நிற்பதைப் பார்த்து கண்கள் விரிய…
“டேய் பாபு! என்னடா இந்த நேரத்துல? உள்ள வா” என்று அவனை உள்ளே அழைக்க… இவர்களில் பேச்சுக்குரல் கேட்டு பக்கத்து அறையிலிருந்து முதியோர் காப்பகத்தை நடத்தும் விசாலாட்சி வெளியே வர…
“காயத்ரி யாரு இந்தப் பையன்?”
“அம்மா! இவன் பேரு பாபு. இங்க பேப்பர் எடுக்க வருவான்.
சொல்லுடா பாபு என்ன விஷயம்?” என்று காயத்ரி கேட்க…
மெல்ல தலையிலிருந்த கோணிப்பையை விலக்க, பாபுவின் தோளில் குழந்தை இருப்பதைப் பார்த்து இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“பாபு! இது யாரு கொழந்த?” காயத்ரி கேட்க
“அக்கா! நா பெரிய ஆஸ்பத்திரி கிட்ட பேப்பர் எடுக்கும்போது, அங்க குப்பைத் தொட்டியில இந்த பாப்பா இருந்திச்சு. என்ன பண்றது தெரியல”
“ஏம்பா. இத போலீசுக்கு சொன்னியா?” என்று விசாலட்சி கேட்க…
“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டேன். ஆனா அம்மா இந்த பாப்பாவ அஞ்சாயிரம் ரூபாக்கு விக்கறதா பேசிட்டு இருந்தாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அதான் இங்கக் கொண்டு வந்தேன். இங்கதான் நீங்க நெறைய பேரை வளர்க்கிறீங்களே. இந்தப் பாப்பாவையும் பத்திரமா பாத்துக்கோங்க” என்று மூச்சிரைக்க கண்ணீரோடு பேசியவனைப் பார்த்த காயத்ரியிடம்…
“காயத்ரி! மொதல்ல கொழந்தைய வாங்கி துவிட்டு விடு. மழைல நனைஞ்சிருக்கு” என்றவுடன், பாபுவிடமிருந்து குழந்தையைப் காயத்ரி வாங்கிக்கொள்ள…
“அக்கா! இந்தப் பாப்பாவை பத்திரமா பாத்துக்கோங்க. பெரிய பாப்பா ஆன பின்னாடி, என்ன மாதிரி பேப்பர் பொறுக்க அனுப்பிடாதீங்க” என்று கூறி நிம்மதிப் பெருமூச்சோடு அந்த இருட்டிற்குள் பாபு நடக்கத் தொடங்கினான். அதைப் பார்த்துக் கண்ணீரோடு நின்ற காயத்ரியிடம்…
“காயத்ரி! அழாதம்மா” விசாலாட்சி கூற,
“எப்படியம்மா அழாமா இருக்க முடியும். குப்பை பொறுக்கற பையன் இந்தக் குழந்தை மேல காட்டற பாசம்கூட என்னோட அப்பா, அம்மா என்மேல காட்டலையே” என்று பீறிட்டு அழுக…
கார்த்தியாய் வலம் வந்தவன், காயத்ரியாய் திருநங்கை அவதாரம் எடுக்க, பெற்றவர்களின் கோபம், சமுதாயத்தின் ஏளனப் பார்வையாலும், துவைத்து எடுக்கப்பட்ட அந்த அப்பாவி இதயத்திற்கு ஆறுதல் சொல்லி… அழைத்துச் சென்றாள் விசாலாட்சி.
– கதைப் படிக்கலாம் – 51
இதையும் படியுங்கள் : மொசக்குட்டி