அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான, சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், தொடங்கி நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயர்கல்வித்துறையில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர், வேலூரில் செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றும், அது நடப்பாண்டிலேயே செயல்படத் தொடங்கும் என்றும் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று தாக்கல் செய்தார்.
மசோதாவில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் என்றும், அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.