தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர், திட்டமிட்டபடி மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியது. அதன் காரணமாக, பிரதமர் மோடி தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, கூட்டத் தொடர் பாதியிலேயே முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தொடரை ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்பதால், தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதால் ஜார்ஜ் கோட்டை தவிர்க்கப்பட்டு சட்டசபை கூட்டத்தை காலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மூன்று நாட்கள்தான் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த திங்கட்கிழமை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில், காரசாரமான விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு உள்இட ஒதுக்கீடு, வரதட்சணை தண்டனை சட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது என பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதைதொடர்ந்து மூன்றாவது நாளான இன்றுடன், தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.