– ஏர்ல். பாரூக்மர்ஜான்
அருண் புரொடெக்ஷன்.
பரந்து விரிந்து அருண் ஆளுமையை தெரிவிக்க, “ஹோ” வென்று உயரத்திலும் அகலத்திலும், கவர்ந்து நின்று கம்பீரத்தைக் காட்டியது கம்பெனி.
ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன், அருணுக்கு பிடித்த வார்த்தைகள். மேல்மட்டப் பதவிகளில் இருப்பவரிலிருந்து, கூலி தொழிலாளர்கள் வரை அந்த கட்டுக்கோப்புடன் தான் நடக்க வேண்டும்.
இதில் பதவி உயர்ந்தவர் ரெகமெண்டில் திமிர் செய்வது, வேலை செய்யாமல் நடப்பது, அவன் கம்பெனியை பொறுத்தவரை ஒழிக்கப்பட்ட விஷயங்கள். சின்னக் குண்டூசி தப்புக்கள், நழுவல்கள், பொய், பித்தலாட்டம் எல்லாவற்றையும் துல்லியமாக கண்டுப்பிடித்து நடுங்க வைப்பதில், தப்பு செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் அனைவரும்.
அதனால்தான் அருண் இந்தக் கம்பெனியோடு சேர்த்து, ஒன்பது கம்பெனிகளை ரன் செய்துக் கொண்டிருக்கிறான்.
அருண் கேபினுக்குள், மேனேஜர் எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி, ரோட்டை வெறித்துக் கொண்டிருக்கும் முதலாளி கேள்விக்காக காத்துக் கொண்டிருந்தார்.
“ஊரெல்லாம் நம்ம புராடெக்ட் நூடுல்ஸை பத்தி என்னப் பேச்சு நடக்குது…….?” நெடுநெடு உயரத்தில், கட்டமைப்பான முப்பது வயது உடலை, கோர்ட்டுக்குள் அழகாக வைத்திருக்கும் அருண், பட்டென்று திரும்பிக் கேட்கவும், மேனேஜர் நிமிர்ந்தார்.
தனக்கு மேனேஜராக இருப்பவர் கூழைக் கும்பிடு போட்டு குனிந்தாலே, எவ்வளவுப் பெரிய திறமையானவராக இருந்தாலும், வேலை ரிஜக்ட் ஆகும் சூத்திரம் தெரிந்திருப்பதால், மேனேஜர் அலர்ட் ஆனார்.
”சார் உண்மையை சொல்லனும்னா…….,”
“நோ தடுமாற்றம். நல்ல விஷயம் ஸ்டிரைட்டா வருகிற மாதிரி, கெட்டதும் வந்தால் தான் நாம, இப்ருமெண்ட் பண்ண வசதியாயிருக்கும்.
அன்டஸ்டேண்ட்……..,”
“யெஸ் சார். நம்ம நூடுல்ஸ்ல அதிகமான அஜினமோட்டோ சேர்த்திருக்குன்னு, பணம் எதிர்பார்க்குற எவனோ, கிளப்பிவிட்ட வதந்தியால, மக்கள் வாங்கி சாப்பிட பயப்படுறாங்க…….,”
“சோ……,”
“நம்ம புரொடெக்ஷன் நிறையவே குறைஞ்சிருக்குது, சார். அவன் இப்பொ நேரடியாகவே வெளியே வந்துப் பேட்டி கொடுக்க ஆரம்பிச்சிட்டான்……,”
“ஓகே.. இப்பொ மக்கள் நூடுல்சையே வெறுத்துட்டாங்களா?”
“அதையும் சர்வே பண்ணிட்டேன் சார். பெரும்பான்மை குறைஞ்சிருக்குது. அதுலயும் நம்ம நூடுல்ஸை தவிர்த்து, மற்ற கம்பெனி புரொடெக்ஷன் ஓரளவு விற்பனையாகுது சார்……,”
“ம்ம்….. ஓகே, அப்போ நம்ம நூடுல்ஸோட தரம் தான் மக்களாள அதிகமாப் பேசப்படுது……,”
“கண்டிப்பா சார். மூலை முடுக்கு, சந்து, பொந்து. ஒரு கடை விடாம சர்வே எடுத்துட்டேன் சார். பேரை கேட்டாலே பயப்படுறாங்களாம்……
இப்படியே நிலைமைப் போனால் கம்பெனி லாசுலல……,” இழுக்க முயன்றார் மேனேஜர்.
“என்ன? கம்பெனியை இழுத்து மூடிருவோமோ? நோ வேஸ்ட் தாட்…… முடிஞ்சா பணம் எதிர்பார்க்குறவனை வர சொல்லுங்க. கேஸை எப்படி உடைக்கனும்னு எனக்குத் தெரியும். அவுட்…….,” என்ற அருணின் அதட்டலுக்கு, மேனேஜர் பறந்துப் போயிருந்தார்.
பால்கனியில் உலாவிக் கொண்டிருந்த அருணை நோக்கி வந்தவன், பவ்யத்துடன் லேசாக பல்லை காட்டினான்.
“சார், நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருக்கேனா?” வந்தவன் பவ்யம் கூடிப் போனது.
“கனகச்சிதமா செஞ்சிருக்கே. நான் எதிர்பார்த்ததை விட மேலாகவே ரிசல்ட் வந்திருக்குது. இனி அதை எப்படி? சரி பண்ணணும்னு எனக்கு தெரியும். இந்தா பிடி, நீ செஞ்ச வேலைக்குக் கூலி…….,” பணக்கட்டுகள் கை மாறியது. பல்லெல்லாம் வெளியே தெரிய இழித்தவன், கட்டுகளைப் பொறுக்கிக் கொண்டு வெளியேறினான்.
அடுத்து அருண் புரொடெக்ஷனிலிருந்து, பிஸ்கட் ரெடியானது. யாருமே யோசிக்காத டேஸ்ட், மணம். பாக்சின் உள்ளே ஒரு பக்கம் பிஸ்கட், மறுபக்கம் டச்சப் செய்துக்கொள்ள டீ மணத்தில் கிரீம் வைத்து ரெடியானது.
மக்கள் டீ வித் பிஸ்கட்டுடன் வேகமாக டிராவல் செய்ய ஆரம்பித்தார்கள். நூடுல்ஸ் புது பரிணாமம் எடுத்தது.
புதினாவின் மணம், ஹெல்த்தி நூடுல்ஸ் என்ற விளம்பரத்தில் வெளிவந்தது, புது பேக்கிங்கில் அருண் நூடுல்ஸ்.
ஒரு மாதம் சென்றது.
“சார், நம்ம நூடுல்ஸ் பிளஸ் அதுல சேர்த்திருக்கிற புதினா டேஸ்ட் மக்கள் கிட்ட, பயங்கரமா ரீச்சாகியிருக்குது சார். நம்ம சேல்ஸ் முன்பை விட உச்சத்தை தொட்டிருக்குது சார்….,” மேனேஜர் பூரித்தார்.
லேப்டாப்பில் தட்டுவதை நிறுத்தாமல் கேட்டுக்கொண்டிருந்த அருண், தலையசைத்தான்.
விம்மி புடைத்த தன் எக்ஸ்பிரஷனுக்கு, முதலாளியின் ரியாக்ஷன், மேனேஜருக்கு சின்னத் தொய்வைக் கொடுத்தது.
லேப்டாப்பை மூடிய அருண் மேனேஜர் அருகில் வந்து தட்டிக் கொடுத்தான்.
“சாரி, வேறொரு பிசி ஒர்க்….. நீங்க ரொம்ப சின்சியரா எடுத்துக்கிட்டு உழைச்சிங்க. ஐ புரௌடாஃப் யூ. எனக்கும் புதுசா ஒரு பொருளை சேர்க்க, சின்ன கலக்கம்தான். எங்கக் குழுவோட என்கரேஜ் தான் செய்ய வச்சது. ஐ யெம் வெரி ஹேப்பி…,” என்ற போது மேனேஜர் சிரித்தார். அவரை குஷி மூடிலாக்கி, அடுத்த வேலைக்கு சுறுசுறுப்பாக்கி அனுப்பினான்.
அவர் சென்றப் பிறகு தன் சீட்டில் வந்தமர்ந்த அருண், உதட்டை சுழித்து, நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்…. ம்ம்ம்கும், எத்தனை வேலைகளைப் பார்த்து, என் புராடெக்டை முன்னுக்கு கொண்டு வந்திருக்கேன் என்று மனதிற்குள் அசைப்போட்டான்.
பல வருஷங்களுக்கு முன்னாடியே கஷ்டப்பட்டு, மூளையை குடைஞ்சு, ஒரு புராடெக்டை கண்டுபிடிப்பேன். அதுல கூடுதல் சுவை சேர்க்க, பணத்தைக் கொட்டி ஆட்களை போட்டு, அவங்க மண்டைய அலசி, ஒரு மசாலா கண்டுப்பிடிப்பேன். அது மக்கள்கிட்ட போய் சேர, கலர், கலரா, பலவிதமா யோசிச்சு, ஊரெல்லாம் விளம்பரம் பண்ணுவேன்….. என் வளர்ச்சி பொறுக்காம, என்னை காப்பியடிச்சு, நீங்கள்லாம் புதுசு, புதுசா உருவாக்கி விற்பீங்க… நான் தலையில துண்டைப் போட்டுட்டு, உங்களுக்கு சாமரம் வீசுனுமா? ஃபூல்ஸ்……,”
“நான் பரம்பரை பிசினஸ்மேன்டா… என்னை முந்திப் போக, உங்களை
விட்ருவேனா?”நெவர்……”
“மக்கள் மனசுல மறைஞ்சு போயிருக்குற, என் கம்பெனி ப்ராடெக்டை ஞாபகப்படுத்தனும். சிம்பிள்… நல்லது போய் சேருகிற வேகத்தை விட, கெட்டச் செய்திகளுக்கு இருக்குற வீரியமே தனிதான்…….,”
“ம்கும், அதுக்கும் நானே பணத்தை விதைச்சி, என் கம்பெனி நூடுல்ஸை பத்தின தவறான விஷயங்களை பரப்பச் சொல்லியிருக்கேன். இப்போ, எங்கே பார்த்தாலும் குறைவான பேச்சுக்கள். ஆனா மக்கள் நாக்குல எப்பவுமே என் நூடுல்ஸோட பெயர் உச்சரிப்பு இருக்குது. இதுதான் வேனும்…….,”
“இதே சூட்டோட கேஸை அமுக்கிப் போட்டு, தப்பான வதந்தினு சொல்ல வச்சிருக்கேன். புது புராடெக்டோட டிராவல், புது பரிணாமம்னு எல்லா முயற்சியும் வெற்றி.
ஆணவம், அலட்சியம், கர்வம், பெருமை அவன் மொத்த உடலை ஆக்கிரமித்துக்கொள்ள, உதட்டைக் கோணலாக சுழித்து உச் கொட்டினான். டேபிளை தட்டிப் பெரிய பிசினஸ்மேன் என்று நிரூபித்த கர்வத்தில் சிரித்தான், அருண்.
செல்ஃபோன் சினுங்க காதுக்கு கொடுத்தான்.
“என்ன சார் சொல்றீங்க? விளையாடுறீங்களா? கோடிக்கணக்கான ரூபாயை, அத்தனை கம்பெனிகள்லேயும் முடக்கி வச்சிருக்கேன். எந்த கொரோனாவும் என்னை ஒண்ணும் செய்ய முடியாது சார்…,” குரலில் அலட்சியம் மேலோங்கப் பேசினான், அருண்.
மறுமுனையில் டிஸ்ட்ரிக் கலெக்டர். “உங்க கம்பெனியை மூடச் சொல்றது, உங்களுக்கு மட்டுமில்லை. உலகம் முழுவதும் இதுதான் ரூல்ஸ். மீறி திறந்தீங்கன்னா, நாங்க சீல் வைக்க வேண்டியது வரும். தொழிலாளிங்க மேலே, கூட்டம் போடுகிற வரம்பு மீறலுக்கு, தடியடி நடத்தப்படும். இதுதான் முடிவு. ஸ்டிரிக்டாவே சொல்லிட்டோம்…..”
“சார் அப்பொ என் புரொடெக்ஷன் எல்லாம்….,”
“ஊரடங்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது அரசு. வேற வேலையில்லாம வந்து, அதிகாரிகள் சொல்லிட்டு போறாங்கன்னு நினைச்சிட்டீங்களா? எந்தக் கடைகள்ல சேல்ஸ் பண்ண முடியும்ன்னு நினைக்கிறீங்க?”
“நூடுல்ஸ், பிஸ்கட், சாக்லேட், இதெல்லாம் அத்தியாவசியப் பொருள்தானே சார்… ஓகே நான் மேலிடத்துல பேசிக்கிறேன்……”
“நீங்க எத்தனை மேலிடத்துக்குப் போனாலும், இப்போ எல்லாரும், ஒரே மேலிடத்துக்கு பயந்து நடக்குற விதியாகிட்டு. ஃபைனலா சொல்லிட்டேன். நீங்க ஒரு ஆளாயிருந்து பண்ண முடியும்… சேல்ஸ் செய்ய துணிவிருக்குன்னு நினைச்சீங்கன்னா செய்ங்க….” மறுமுனை கட்டானது.
‘பொத்’தென்று தலை சுற்ற விழுந்த அருண், ஒரு மாசம் இரண்டு மாசம்….. முடங்கியே போனான்.
உலகையே ஆட்டியெடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா, அடங்க மறுத்தவர்களை அடக்கி, தலையில் கை வைத்து அமர வைத்தது.
ஊரெல்லாம் வைரஸ் அழியத் தொடங்கி விட்ட செய்தி பரவியது. அருண் தன் பாவ விமோசனத்துக்கு வழி கண்டுபிடித்துவிட்டான்.
லாபம் சிறிது கிடைத்தாலும், தரமான புராடெக்டை உருவாக்கி, மக்கள் நலன் காக்கும் யோசனையில் மூளையை செலவழிக்க ஆரம்பித்தான்.
நிறைய மூளையை பாதித்திருந்த கெட்ட வைரஸ்கள், கொரோனோ வைரஸால் சுத்தமாக அழிக்கப்பட்டு, உலகமே சுத்தமானது!
– கதைப் படிக்கலாம் – 59
இதையும் படியுங்கள் : முகவரி தேடிய முழுமதி…