சீனாவில் பரவ தொடங்கியுள்ள ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் புதுவகை பாக்டீரியா நோய்த் தொற்றால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கி, 9 லட்சத்திற்கும் அதிகமான மனித உயிர்களை கொன்று குவித்துள்ள, கொரோனா வைரசின் அச்சுறுத்தலே இன்னும் முழுமையாக ஓயாத நிலையில் தற்போது மேலும் ஒரு நோய்த்தொற்று வேகம் எடுத்துள்ளது.
ப்ரூசெல்லா எனப்படும் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த பாக்டீரியா நோய்த் தொற்றுக் கிருமி, சீனாவின் கால்நடை தடுப்பூசி ஆய்வகத்திலிருந்து கடந்த ஆண்டு கசிந்தது என கூறப்படுகிறது.
ஹான்சு மாகாணத்தின் தலைநகரான லான்சவ் நகரில் இயங்கும் உயிரியல் மருந்து நிறுவனத்தின் ஆய்வகத்தில், கால்நடைகளைத் தாக்கி மடிநோயை ஏற்படுத்தும் புரூசெல்லா எனும் பாக்டீரியாவுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் ஆய்வுப் பணிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில், ஆலையில் வாயுக் கசிவு ஏற்பட்டது. அப்போது, ஆய்வகத்திலிருந்து ப்ரூசெல்லா பாக்டீரியா காற்று மூலம் பரவத் தொடங்கியுள்ளது.
இதனால், ஆய்வகத்தைச் சுற்றியிருந்த 200 பேருக்குக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாக்டீரியா நோய் தொற்று ஏற்பட்டது. அவர்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை, 3245 பேருக்கு ப்ரூசெல்லா பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ப்ரூசெல்லா வகை பாக்டீரியாக்கள் பொதுவாக இறைச்சி மற்றும் பதப்படுத்தாத பாலில் தான் அதிகம் காணப்படுகின்றன. மாசற்ற உணவை உட்கொள்ளும்போது, நோயுற்ற விலங்கினங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன. இது காற்று மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள திறந்த காயத்தின் மூலம் எளிதில் பரவக்கூடியது. கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்கும். ப்ரூசெல்லா நோய் தாக்குதல் ஏற்பட்டால் குளிர் காய்ச்சல், உடல் வலி, தலை வலி, பசியின்மை, எடை குறைதல் ஆகியவை ஏற்படும். பொதுவாக இந்த வகை பாக்டீரியா தொற்று மரணத்தை ஏற்படுத்தாது. மூளை அழற்சி ஏற்படும். ஆனால், சீனாவில் ஆய்வகத்திலிருந்து பரவி வரும் ப்ரூசெல்லா வகை தொற்றானது சிலருக்கு ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
நோய் பரவல் குறித்து கான்சு மாகாண சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “29 லட்சம் மக்கள்தொகை கொண்ட லான்சவ் நகரத்தில் இதுவரை 21,847 பேருக்குப் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். அவர்களில் 3245 பேருக்கு நோய்த் தொற்றை உறுதிப்படுத்தியுள்ளோம். பாக்டீரியா பரவியதையடுத்து உயிரியல் மருந்து ஆய்வகத்தின் உரிமையை ரத்து செய்துள்ளோம். மேலும், அங்கு தயாரித்த ப்ரூசெல்லா தடுப்பூசிகள் இரண்டையும் தடை செய்துள்ளோம். நோய்த் தொற்றைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.