இந்திய திரையுலகில் கானக் குயிலாக வலம் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்த நிலையில், திரைத்துறையில் அவர் பெற்ற விருதுகளையும் , சாதனைகளையும் சற்று திரும்ப பார்க்கலாம்.
எம்.ஜி.ஆர் தொடங்கி தமிழ் சினிமாவில் 5 தலைமுறைகளை கடந்து, தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத குரலாய் உருவெடுத்தவர் எஸ்.பி.பி.
திரைத்துறையில், அவரது சாதனைகளை பாராட்டி இதுவரை பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர், தனியார் அமைப்பை சேர்ந்தவை என பல விருதுகள் அவரது இசை மகுடத்தை அலங்கரித்துள்ளன.
அதன்படி,
1969 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான “தமிழக அரசு சினிமா விருது” ‘அடிமைப் பெண்”, ‘சாந்தி நிலையம்’ திரைப்படங்களில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “சங்கரா பரணம்” திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓம்கார நாதானு” என்ற பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான “தேசிய விருது” பெற்றார்.
1980 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான “தமிழக அரசு சினிமா விருது” ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு “ஏக் துஜே கே லியே” ஹிந்தி திரைப்படத்தில் ‘தேரே மேரே பீச் மே’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “தேசிய விருது”. இது, இந்தியில் அவர் பாடிய முதல் பாடலாகும்.
1983 ஆம் ஆண்டு “சாகர சங்கமம்” தெலுங்கு படத்தில் ‘தகிட ததிமி’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “தேசிய விருது”.
1988 ஆம் ஆண்டு “ருத்ர வீணா” தெலுங்கு திரைப்படத்தில் ‘செப்பாலனி உண்டி” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “தேசிய விருது”.
1989 ஆம் ஆண்டு “மைனே பியார் கியா” ஹிந்தி திரைப்படத்தில் ‘தில் தீவானா’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “பில்ம்பேர்” விருது வழங்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான “தமிழக அரசு சினிமா விருது” ‘கேளடி கண்மணி” திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான “தமிழக அரசு சினிமா விருது” ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டு “சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர கவாய்” கன்னட திரைப்படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “தேசிய விருது”.
1996 ஆம் ஆண்டு “மின்சார கனவு” தமிழ் திரைப்படத்தில் ‘தங்கத் தாமரை மலரே’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “தேசிய விருது”.
2001 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் “பத்மஸ்ரீ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு “மொழி” தமிழ் திரைப்படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “பிலிம்பேர்” விருது வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் “பத்ம பூஷண்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1978 முதல் 2012 வரை தெலுங்கு திரைப்படங்களில் சிறந்த பின்னணி பாடகருக்கான மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான “நந்தி விருது” பல்வேறு திரைப்படங்களுக்காக பலமுறை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1997–98 2004–05 மற்றும் 2007-08 ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான “கர்நாடக அரசு சினிமா விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டு “கலைமாமணி விருது” வழங்கி தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஏனைய பல்கலைக் கழகங்களிலிருந்து “கௌரவ டாக்டர் பட்டம்” மற்றும் இன்னும் பிற ஏராளமான விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்.
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.