இசைக்கு மயங்காத உயிர்கள் இவ்வுலகில் இல்லை என்று சொல்வார்கள்! நான் மட்டும் அல்ல நாம் எல்லோருமே சிறுவயதில் இருந்து இப்போது வரை கேட்கும் பாடல்களில் பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் பாடல்கள் கண்டிப்பாக நீங்காத இடம் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..
நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதிலிருந்து இப்போது வரை தினமும் காலையில் ஒலிக்கும் “நமச்சிவாய! நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!” என்ற பக்திப் பாடலில் வரும் குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்.பி.பி அவர்கள் தான். குழந்தைகளுக்கான தாலட்டுப் பாடல்கள் பலவற்றைப் பாடியவரும் அவர்தான்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையில் இருக்கும்போதும் ஒவ்வொரு வகையான பாடல்களைக் கேட்க விரும்புவது இயற்கையே!
அப்படி நான் என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளில் இருக்கும்போதும் என் காதுகளில் ஒலிக்கும் ஒவ்வொரு இனிமையான பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் எஸ்.பி.பி அவர்கள் தான்.. பக்திக் கடலில் திளைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தன் மனதில் தோன்றும் பக்தியுணர்வை வெளிக்கொணர்வதற்குக் கருவியாய் இருக்கும் பக்திப் பாடல்களில் எஸ்.பி.பி அவர்களின் பாடல்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
சிறுபிள்ளைகளை ஆட்டம் போட வைக்கும் குத்துப் பாடல்களிலும் எஸ்.பி.பி அவர்களின் குரலில் ஒலித்தப் பாடல்களுக்கு இடமுண்டு.. இயற்கையின் அழகை வர்ணித்துப் பாடும் பல பாடல்களிலும் எஸ்.பி.பி அவர்களின் குரலில் ஒலித்த பாடல்கள் பலபல..”இது ஒரு பொன்மாலைப் பொழுது!” என்று அவர் மாலைப் பொழுதினை வர்ணித்து தன்னுடைய காந்தக் குரலால் பாடும் பொழுது உண்மையிலேயே மாலைப்பொழுதினை பலநேரங்களில் நான் இனிமையாக உணர்ந்துள்ளேன்!
காதல் எனும் அற்புதமான உணர்வை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்த காதல் பாடல்கள் பலவற்றிலும் எஸ்.பி.பி அவர்களின் குரலில் ஒலித்த பாடல்கள் எண்ணிலடங்காதவை.. அவரது குரலில் ஒலிக்கும்,”காதலின் தீபம் ஒன்று”, ”காதல் கவிதைகள் படித்திடும் நேரம்”என்பன போன்ற காதல் பாடல்கள் அன்று மட்டுமல்ல என்றும் காதலர்களின் நெஞ்சைவிட்டு நீங்காதவை.
காதலை மட்டுமல்ல பெண்களை வர்ணித்தும், பெண்மையைப் போற்றியும் வெளிவந்த பல திரைப்படப் பாடல்களில் அவரின் குரலில் வெளிவந்த பாடல்கள் பலவுண்டு.. ”மண்ணில் இந்தக் காதலன்றி”, “என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை” என்பன போன்ற பாடல்கள் எல்லோர் மனதிலும் நீங்காத இடம்பிடித்தவை..
காதல் பாடல்கள் மட்டுமல்ல தத்துவப் பாடல்கள் பலவற்றையும் தன்னுடைய குரலில் பாடி அசத்தியுள்ளார் அந்த இசையின் சிகரம்.. அதுமட்டுமல்ல காதல் தோல்வியை வெளிப்படுத்தும்,”உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்!” போன்ற பல பாடல்களில் அவரது குரலிலேயே சோகத்தையும், காதல் தோல்வியின் வலியையும் வெளிப்படுத்திப் பாடியிருப்பார்.குழந்தையில்லாதவர்களின் சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் பாடிய”நிலவே முகம் காட்டு” என்ற பாடலில் குழந்தையில்லாதவர்களின் வலியையும்,சோகத்தையும் அவருடைய குரலின் மூலம் மற்றவர்களுக்கு உணர வைத்திருப்பார்..
அதுமட்டுமல்ல “மானூத்து மந்தையில மான்குட்டி பகத்த மயிலே” என்பன போன்ற பல நாட்டுப்புறப் பாடலில் அண்ணன், தங்கை பாசத்தையும், கிராமத்தின் அழகினையும் தன் குரலின் மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார். ”ஸ்டைலு,ஸ்டைலுதான்”போன்ற பாடல்களை உண்மையிலேயே ஸ்டைலாகவும் பாடி அசத்தியிருப்பார்.. இப்படி ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு தோரணையில் பாடி அசத்தி மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்தத் திறமையான பாடகர் அவர்.
தன்னுடைய ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தன்னுடைய குரலினை பலவிதமாக ஏற்றி, இறக்கிப் பாடித் தன்னுடைய காதல் பாடல்களில் அவரது இனிய குரலினால் இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மையும் இனிமையாக உணர வைத்தவரும் அவரே!! சோகப் பாடல்களை பாடும்போது சோக உணர்வை உள்வாங்கித் தன் குரலின் மூலம் அதே சோக உணர்வை வெளிப்படுத்திப் பல சமயங்களில் தன்னுடைய பாடல்களின் மூலம் நம்மை அறியாமலேயே நம்மை அழ வைத்தவரும் அவரே!! கிராமத்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்பொழுது தன்னுடைய குரலிலேயே கிராமத்தின் அழகையும், சகோதரப் பாசத்தையும் நமக்கு உணர வைத்தவரும் அவரே!!
அப்போதிருந்த எம்.ஜி.ஆர் முதல் இப்போதுள்ள கமல், ரஜினி, விஜய், அஜித் வரை பிரபலமாக உள்ள அனைத்து நடிகர்களின் படங்களிலும் எஸ்.பி.பி அவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இப்படித் தாலாட்டுப் பாடல்கள் முதல் தத்துவப் பாடல்கள் வரைக் காதல் பாடல்கள் முதல் சோகப் பாடல்கள் வரை எனத் தன்னுடைய காந்தக் குரலால் அனைத்து மக்களையும் கட்டிப்போட்டுவிட்டு, இப்போது தன்னுடைய இனிமையான குரலால் பாடிய பாடல்களை மட்டும் நம்மிடம் விட்டுவிட்டுத் தன்னுடைய இன்னுயிரை நீர்த்து இந்த மண்ணுலகைவிட்டுச் சென்றுவிட்டார் அந்த மாபெரும் கலைஞர்..
அவர் பாடிய “சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்” என்ற பாடலில் ”எந்தன் ஜீவன் அழிந்தாலும், இசையாய் மலர்வேன்”என்று அவர் தன் குரலில் பாடியிருப்பதைப்போல், எஸ்.பி.பி அவர்களின் ஜீவன் இன்று மறைந்தாலும் அவரின் குரலும்,அவர் பாடிய பாடல்களும் என்றும் நம் மனதில் இசையாய் மலர்ந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!!