– ர. ஹரிஹர சுதன்

‘இரு.. இரு.. வண்டி நிக்கும்., நின்ன பிறகு ஏறு..’ ‘டேய் ஜன்னல் வழியா எதயும் போடாத., அப்புறம் நான் வெளில தூக்கி போட்றுவேன்’ ‘ஏறுடா.. ஏறுடா.. இவளுங்க வேற இடைல வந்துட்டு.. வேகமாக ஏறுடா., கிழவிங்க ஏதாவது உட்காந்துட்டு, “ஏம்பா இளவட்டப் பசங்க நின்னுட்டு வர வேண்டியதுதான” அப்டினு வியாக்காணம் பேசும்..’ ‘ஏய் பேக்க விடுடி., இவ வேற பூவயே புடிச்சி இழுக்குறா..’ ‘காலேஜ் மட்டும் ஏறு, இடைல எந்த ஸ்டாப்பும் நிக்காது. மல்லி, கேண்டீன் ஸ்டாப்புக்கு வண்டி பின்னாடி வருது. காலேஜ் மட்டும் ஏறிக்கோ’ என்று, இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வழியாக அப்பா சொன்னதுபோல படியில் தொங்காமல், அம்மா சொன்னதுபோல நெரிசலில் சிக்காமல், பேருந்தின் நடுவில் உள்ள இருக்கையில் அமர்ந்தான், பாரதி கண்ணன்.
வழக்கம் போல, பெண்கள் கல்லூரியின் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், திருவில்லிபுத்தூர் தேவாலயம், நீதிமன்ற வளாகம் எனப் பார்த்துக்கொண்டே வந்தப் போதுதான், திடீரென இன்றைக்குத் தேர்வு என ஞாபகம் வர, புத்தகத்தை திறந்து முன்னாள் உள்ள இருக்கைக்கும், தலை உச்சிக்கும் ஒரு சானுக்கும் குறைவான இடைவெளியில் குனிந்தவாறு படித்துக் கொண்டிருந்தான்.
நிறைமாத கர்ப்பிணியை சுமந்தவாறு தாயையும் சேயையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மல்லி விலக்கிலிருந்து வேகமாக திரும்ப, பேருந்தின் ஓட்டுநர் இந்தியாவின் இருநூறு எதிர்கால ஒளிகளை பிரகாசிக்க வேண்டும் என்ற கொள்கையில், சடாரென பிரேக் அடித்தார்.
இருக்கைகளில் அமர்ந்தவர்கள் கம்பிகளை பிடிக்க, நின்றவர்களில் பாதி பேர் சீட்டில் உட்கார, நடத்துனரின் காதில் சொருகி வைத்திருந்த பேனா முன்னாள் நின்ற மாணவனின் சட்டைப்பையில் விழ, பேருந்தே சிறிது நேரம் தடுமாறியது.
பாரதி கண்ணனின் தலை முட்ட எழுந்துத் தலையில் தேய்த்துக்கொண்டே.. ஏதோ ஒரு ஈர்ப்பு அவன் கண்களை இழுத்தது. நம்மை யாரோ அல்லது ஏதோ கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தேட, தனக்கு முன்னால் இருந்த ஆறு இருக்கைகளைத் தாண்டி, வடக்கு ரத வீதி தள்ளுவண்டியில் போட்ட 150 ரூபாய் சுடிதாரயும், பள்ளியில் இலவச மடிக்கணினிக்காக கொடுத்த பேக்கையும், கொசுவத்தி சுருள் போன்று கிடந்த முடியை வலுக்கட்டாயமாக இழுத்து மளமளவென்று எண்ணெயைத் தடவியும், மூக்கிற்கு அருகிலும் வலது கன்னத்திலும் மேலும் நாடிக்குழியிலும் சிறிது சிறிதாக முளைத்திருந்த பருக்களைக் கொண்டவளாய் பாரதி கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தாள், அவள்.
என்ன செய்வதென தெரியாமல் படிப்பது போல் நடித்துக்கொண்டே அவளைப் பார்ப்பதும், தோழிகளுடன் சிரித்துக்கொண்டே அவள் இவனைப் பார்த்துக்கொண்டும் இருந்தப்போது, வறட்சி கண்ட பூமியில் மழைத்துளி தூறியது போல இருவரின் உதட்டோரத்திலும் சிரிப்பு எட்டி பார்த்தது. திடீரென இடி விழுந்தது போல நடத்துநர் விசில் அடிக்க, கல்லூரி வந்தது. பாரதி கண்ணன் இறங்கி விட்டு அவளை ஜன்னல் வழியாக தேடினான்.
அவளைக் காணாமல் துடித்தபோது, அவளின் விழிகள் பேருந்து ஜன்னலின் இரண்டு கம்பிகளுக்குள் பாரதி கண்ணனைப் பார்த்துப் பேசியது. பேருந்து செல்ல, அடுத்த முறை இவள் யாரென பார்த்து அவளிடம் பேசியாக வேண்டும் என்ற எண்ணம், இரண்டு நாட்களாக ரத்த ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
அவள் படிக்கும் கல்லூரி மாலை மூன்று மணிக்கே முடிந்து விடுவதால், அதற்கடுத்து வரும் பேருந்தில் ஏற வேண்டும் என்று மதியமே காலேஜ் கட் அடித்துவிட்டு, மூனரை மணி திருவில்லிபுத்தூர் டவுன் பஸ்சுக்காக தன் கல்லூரியின் முன்னாலிருக்கும் ஒற்றைப் புங்கை மரத்தின் நிழலில் காத்திருந்தான்.
மூனரை மணி பேருந்தே பத்து நிமிடம் கழித்து வர, அதில் அவள் இருப்பதாகத் தெரியவில்லை. அதன் பின்னால் வந்தப் பேருந்தில் பாரதி கண்ணன் படிக்கும் கல்லூரியையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஓட்டுநரின் இருக்கைக்கு சமமாக உள்ள என்ஜின் மீது உட்கார்ந்து வந்தவளை, பாரதி கண்ணன் பார்க்க, உடனே கைகளை அசைத்தான்.
பேருந்தும் நின்றது; அவளும் பார்த்தாள். அந்தக் கணகளைப் பார்த்துக்கொண்டே, முன்பக்க வாசலில் ஏறினான். “உன் கறுப்பன் வந்துட்டாண்டி”, என்று தோழிகள் கூற, அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பாரதி கண்ணன் சற்று பின்னால் பார்த்துவிட்டு முன்னால் திரும்பியபோது, கையில் ஒரு டைரியோடு கண்முன்னே நின்றாள், அவள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாரதி கண்ணன், ‘என் பேரு.. என் பேரு..’ என்று உளற ஆரம்பித்தான். “பாரதி, உனக்காக உன்னோட பிறந்த நாளான அக்டோபர் பத்துல ஒன்னு எழுதிருக்கேன். அத படிச்சிட்டு எனக்கு பதில் சொல்லு” என்று கையில் கொடுத்து விட்டு மீண்டும் என்ஜினில் அமர்ந்தாள், அவள்.
தன் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சம்பாதித்தாலும் புகழ் பெற்றாலும் பெற முடியாத இன்பத்தை பெற்றவனாக நின்றான்.
ஆனாலும், பெண்கள் கில்லாடிகள் தான். எப்படியோ என் பிறந்தநாள் முதற்கொண்டு தெரிந்துக் கொண்டாலே, என்று நினைத்துக்கொண்டே டைரியைத் திறந்துப் படிக்க ஆரம்பித்தான்.
உங்கள பஸ்ல முதன் முறையா பாத்தேன்.
உங்கக் கண்ணு எனக்கு ரொம்ப பிடிச்சது..
அடுத்து நீங்க இறங்கி போகும்போது சிரிச்ச சிரிப்பு பிடிச்சது…
என்னதான் நீங்க கருப்பா இருந்தாலும், அழகு தான்…
இந்தப் பாசமுள்ள தங்கச்சிய உங்கத் தோழியா ஏத்துகோங்க… என்று படித்ததும், தங்கச்சி என்பதை, “நல்ல வேலை இப்போதே தங்கச்சி என்று சொல்லிவிட்டாலே என்று நினைத்தோ இல்லை., தங்கை என்று சொல்லிவிட்டு தோழி என்கிறாள்” என்று நினைத்தோ சரி என்ற மனதுடன் மேலும் படிக்க,
உங்கள எல்லாரும் கண்ணா அப்டின்னு கூப்புடுறாங்க…
ஆனா நான் உங்கள பாரதினு கூப்பிடுவேன்…
என்றும் பாசமிகுந்த, பொன்செல்வி….
பொன்செல்வி என்ற பெயரைக் கேட்டதும் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்த வரையில், குலதெய்வ வகையறாக்களை பொருத்து, முறைச் சொல்லி பழகியதால் என்னவோ பாரதி, பொன்செல்வி எனது தங்கை தான் என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவளைக் கூப்பிட்டான்.
வாய் நிறைய சிரிப்போடு அருகில் வந்த பொன்செல்வியிடம், “என்னை பத்தாம் வகுப்பு இங்கிலீஷ் சார் மட்டும் தான், இதுவரை பாரதினு கூப்பிட்ருகாரு.. அதுக்கப்புறம் என் தங்கச்சி நீதான் கூப்பிடபோற..” என்றுச் சொன்னதும் மிகவும் ஆனந்தமாக சிரித்தாள், பொன்செல்வி.
இந்தப் புன்னகையை மேலும் வலுப்பெற வைக்க, “தனக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவன் எனது முறை மாமன்” என்று கூறினாள், பொன்செல்வி. இதைக் கேட்ட பாரதி, ‘அவரைப் பார்த்தே ஆக வேண்டும்’ என்றான். சரி.. என்று அவளும் கூற, இருவரும் ஒரே வண்டியில் செல்கிறார்கள்.
அழுக்குச் சட்டையோடும், கிரீஸ் கரையோடும், பழுது பார்க்க வேண்டிய வண்டிகளுக்கு மத்தியில் இருந்த பொன்செல்வியின் மாமாவைப் பார்த்ததும், இவளின் வாழ்க்கை ரசனை மிகுந்த தனித்துவம் வாய்ந்தது என்றும், இவளின் நட்பு நம்முடைய வாழ்விற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் எண்ணி, மனம் நெகிழ்ந்து நின்றான், பாரதி.
‘மாமா நான் சொன்னேன்ல’ என்று பொன்செல்வி கூறியதும், “ஆமா.. வாங்க பாரதி கண்ணன்..”, என்று தன்னுடைய காதலியை வேறொரு ஆண் தனியாக அழைத்து வந்திருக்கிறான் என்று, சற்றும் மனம் கோணாமல் வரவேற்ற அவளது மாமனின் நம்பகத்தன்மையை உணர்ந்து, மேலும் மகிழ்ச்சியடைந்தான்.
இப்படியாக சந்திப்புகளும் மகிழ்ச்சியான தருணங்களும் கூடி வர வர, ஒரு தடுப்பணை உருவானது. அதுதான், கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டு.
கிட்டத்தட்ட இரண்டரை வருடம் பழகிய நட்பானது பிரியும் நேரம் வந்தது. இப்போது தான் பாரதியும், பொன்செல்வியும் தங்கள் அலைபேசி எண்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.
முதுகலைப் படிப்பிற்கு பாரதி சென்னை செல்ல, பொன்செல்வியோ குடும்ப நிலை காரணமாக ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்கிறாள். தனியாக ரூம் எடுத்து படித்துக் கொண்டிருக்கும் பாரதியின் ஃபோனுக்கு, திடீரென புதிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. யோசித்துக்கொண்டே ஃபோனை காதில் வைக்க, “பாரதி” என்ற குரல்.
பெண் விடுதலைக்காக எழுச்சிப் பாடலை பாடிய பாரதியின் வரிகள் கேட்டு பாரதம் விழித்தவாறு, பாரதி கண்ணனும் இன்ப மழையில் நனைகிறான்.
இருவரும் நலம் விசாரித்தப் பின்பு, “எனக்கு மேல படிக்கணும் போல இருக்கு.. ஆனா வீட்ல முடியல” என்று கூறுகிறாள் பொன்செல்வி. “நீதான் வேலைக்கு போரள.. அந்தக் காச வச்சிப் படி” என்று கூறுகிறான் பாரதி. இது பொன்செல்விக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்த, “இனிமேல் எனக்கு என்ன பிரச்சினை அப்டினாலும் உனக்கு ஃபோன் போடுவேன்” என்று கூறுகிறாள். சரி.. என்று வேறு வார்த்தை ஏதும் பேச வராமல், கண்ணீருடன் ஃபோனை வைக்கிறான், பாரதி. அவளும் அருகில் உள்ள அரசுக் கல்லூரியில் முதுகலைப் படிப்பை ஆரம்பிக்கிறாள்.
இதிலிருந்து பாரதி எப்பொழுது ஊருக்கு வந்தாலும், ஊரிலிருந்து சென்னை சென்றாலும், பொன்செல்விக்கு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருப்பான். ஆனால் போதுமான இருப்புத்தோகை ஃபோனில் இல்லாததால், பொன்செல்வியிடமிருந்து எந்தவித பதிலும் வராது.
இருந்தப்போதிலும், எந்நேரமாவது கால் செய்தால் பதில் அனுப்ப முடியாததற்கு மன்னிப்புக் கேட்பாள், பொன்செல்வி. இப்படியாக நாட்கள் ஓட, வீட்டில் உள்ள ஒரு வேலைக்காக பாரதி வழக்கம்போல குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, ஊருக்கு வந்துவிட்டு சென்றான். அடுத்தப் பத்து நாட்களுக்குள் மீண்டும் ஊருக்கு வந்தான்.
வீட்டுத் தேவைக்காக கடைக்குச் சென்ற பாரதி, பொருள் வாங்கிக் கொண்டிருந்தான். “பொன்செல்வி இறந்துவிட்டாள்” என்றக் குரல் கேட்டது. கையில் வைத்திருந்த காய்களை சட்டென போட்டுவிட்டு, சட்டைக்கு மேலே துடிக்கும் இதய படபடப்போடு திரும்பிப் பார்த்தான். அங்கே பொன்செல்வியுடன் படிக்கும் சக மாணவி நின்றுக் கொண்டிருந்தாள்.
‘என்ன சொன்ன?’ என்று பாரதி கேட்க, “ஆமா.. பொன்செல்வி தூக்குப்போட்டு இறந்துட்டா., ஏதோ ரொம்பக் கால் வலியாம்., அதனாலதான் இப்டி செஞ்சிக்கிட்டாலாம், எனக்கே ரெண்டு நாள் கழிச்சுதான் தெரியும். வீட்டுக்குப் போனோம்.. அவுங்க அம்மா தான் அழுதுகிட்டு இருந்தாங்க..” என்றாள் அவள்.
“இதனால்தான் என்கிட்ட அவ பேசலயோ.. ஒருவேளை ஃபோன்ல பேலன்ஸ் இல்லையோ.. என்ன கஷ்டம் வந்தாலும், உன்கிட்ட சொன்னா எனக்கு நல்லா இருக்கும்னு சொன்னாலே.. ஒரு கால் பண்ணிருக்கலாமே.. கால் வலிக்காகவா.. அப்ப நான் யாருக்கு செய்தி அனுப்பிக்கிட்டு வந்தேன்? இத அவுங்க அம்மா பார்த்து, பொன்செல்வி இல்லனு தெரியாமலே யாரோ இவகிட்ட பேசிகிட்ருகாங்களே.. அப்டின்னு, நினைச்சிட்டு இருப்பாங்க..” என்று எண்ணியவாறு வாழ்க்கையின் எதிர்பாராத பல திருப்பங்களை நோக்கி செல்கிறான், பொன்செல்வியின் பாசமிகு அண்ணன் பாரதி..
– கதைப் படிக்கலாம் – 87
இதையும் படியுங்கள் : பக்குவம்




