– ‘தமிழ்ச்செம்மல்’ மா. பாண்டுரங்கன்
“பளீர்”
“ஐயோ… அம்மா!… அம்மா!” தனலில் விழுந்தப் புழுவாகத் துடித்தான் வசந்தன்.
‘பளீர்… பளீர்!’
அவன் அப்பா சிங்காரத்தின் இடுப்பு பெல்ட், அவன் உடம்பைச் சுற்றி தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருந்தது.
“அயோக்கிய ராஸ்கல்! ஃபெயிலாயிட்டு ஏண்டா வீட்டுக்கு வந்தே?… அப்படியே எங்கேயாவது போய்த் தொலையறதுதானே?”… கர்ஜித்தார் சிங்காரம். அவர் கண்கள் நெருப்புத் துண்டங்களாகக் காட்சியளித்தன.
“என்னங்க, புள்ளையை இப்படிப் போட்டு அடிக்கிறீங்க?” கேட்டாள் அம்மா சிவகாமி.
“சிவகாமி, இந்த வருஷமும் பரீட்சையிலே ஃபெயிலாயிருக்கான். இவனை என் மகன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.”
“அவனுக்குத்தான் படிப்பே ஏறலையே, அவனைப் போய் படிடா, படிடான்னா என்ன செய்வான்? அடிச்சதுப் போதும். விடுங்க.” தடுத்தாள் சிவகாமி.
“பெல்ட்டை மாட்டிக்கொண்டு அந்தச் சிங்கம் தன் குகைக்கு… போலீஸ் ஸ்டேஷனக்கு… கிளம்பிப் போனது.
வசந்தனின் அப்பா சிங்காரம் காவல் துறை இன்ஸ்பெக்டர். இருட்டு அரக்கனையும், குற்றவாளிகளையும், குருதியையும், சிதைந்த பிணங்களையும் அன்றாடம் சுற்றிச் சுற்றி வந்ததால், உறைந்துவிட்ட உதிரம்போல் அவர் உள்ளம் இறுகிக் கிடந்தது.
வசந்தன் அவர்களுக்கு ஒரே மகன் அல்ல. அவனுக்குக் கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கும் அண்ணன் சரவணன், அக்கா மாலதி, தம்பி ராமச்சந்திரன் ஆகியோரும் உண்டு.
சிங்காரம் எல்லோரையும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆனால் வசந்தனுக்கு மட்டும் படிப்புக் கொஞ்சமும் மூளையில் ஏறவில்லை. படிக்கும் பாடத்தை உடனுக்குடன் மறந்துவிடுவான். அவனுக்கு சாதாரண கூட்டல், கழித்தல்கூட சரியாகப் போடத் தெரியவில்லை.
“அப்பா, எனக்குப் படிப்பு வரலே. நான் ஏதாவது வேலைக்குப் போறேன்பா” என்று அவன் சொன்னபோது, “உனக்கு எவண்டா வேலை தருவான்? தடிமாடாட்டம் இருக்கிற உனக்கு மூட்டை தூக்கற வேலைதான் கிடைக்கும். எனக்கு இருக்கிற கொஞ்ச மானத்தையும் வாங்கிடலாம்னு தீர்மானிச்சிட்டியா? உதவாக்கரை… உதவாக்கரை! டேய் நீ படிடா. படி. பத்து வருஷமானாலும் படி.” என்று அடித்து… ஆம், உண்மையில் அடித்தேதான் சொன்னார் அவன் அப்பா.
“தம்பி!”…
அக்கா மாலதியின் பாசக்குரல் கேட்டு, மெதுவாக எழுந்திரிக்க முயன்றான். முடியவில்லை. உடம்பின் ஒவ்வொரு பாகமும் நெருப்பில் வெந்தப் புண் போல், ‘சுருக் சுருக்’ என்று வலித்தன. உதிய மரம் போல் அவன் கால்கள் பருத்திருப்பது போன்றதொரு பிரம்மை!
மாலதி அவன் தலையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.
“அக்கா, சாயங்காலம் உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்லே வர்றாங்கதானே? அக்கா, வர்ற மாப்பிள்ளை என்னை மாதிரி இல்லாம, உன்னையும் விட அதிகம் படிச்சவரா, அறிவுள்ளவரா, அழகானவரா இருக்கணும் அக்கா. முக்கியமா அப்பா மாதிரி கோபக்காரரா, பெல்டைக் கழட்டி அடிக்காதவரா இருக்கணும்… அக்கா, உனக்குக் கல்யாணம் ஆகி நீ போகும்போது, என்னையும் உன்கூடவே கூட்டிட்டுப் போயிடுக்கா. இங்கே அப்பா, அண்ணா எல்லாரும் என்னை ‘உதவாக்கரை! மண்டூகம், தண்டச் சோறு!’ அப்படியெல்லாம் சொல்றாங்க.”
மேலே பேச முடியாமல் தத்தளித்தான் வசந்தன்.
“தம்பி, உன்னை யார் அப்படி சொன்னாலும், நான் அப்படி சொல்லவே மாட்டேன். உன் மனசு எனக்குத் தெரியும். நீ பேசாம தூங்கு.” என்று ஆறுதலாகச் சொன்னாள் மாலதி.
அந்த இருட்டறையில் தனியனானான் வசந்தன்.
இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி மறுபடியும் திறந்து விடும். பள்ளிக்கூடம் போயாக வேண்டும். அதே வகுப்பில், அதே ஆசிரியர் முன் பாடம் கேட்க வேண்டும். அவன் வகுப்புக்குத் தேறி வந்தப் புதிய மாணவர்கள், அவனை கடைசி பெஞ்சுக்கு தள்ளி விடுவார்கள். அவனுடன் யாரும் சேர்ந்து பேசிப் பழக மாட்டார்கள். அவர்களின் ஏளனப் பார்வையும், ஏச்சும், பரிகாசமும் அவனை சல்லடைக் கண்களாகத் துளைத்து விடும்.
நடக்கப்போகும் நிகழ்ச்சிகள் கண்முன் திரையிட்டப் போது… அவன் உடல் கூசிக் குறுகியது. “அம்மா!” கண்களை மூடிக் கொண்டான் வசந்தன்
மாலை ஐந்து மணி…
வீட்டு ஹாலில் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் கீழே சிங்காரம், மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோஃபாக்களில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் பலகாரம், ஆவி பறக்கும் காபி.
பட்டுப் புடவை அணிந்து கழுத்திலும், கைகளிலும் தங்க நகைகள் ஜொலிக்க, படபடக்கும் இமைகளுடன் தங்கப் பதுமையாக வந்து நின்றாள் மாலதி. கலையாத கிராப்பு, அளவான அரும்பு மீசை, மிடுப்பானப் பார்வை, எடுப்பான நாசியுடன் அமர்ந்திருந்த மனோகரன், மாலதியின் அழகை ரசிக்கத் துவங்கினான்.
அத்தனையையும் கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்தன், திடீரென “ஐயோ அம்மா.” என்று அலறியபடி தரையில் விழுந்துத் துடித்தான்.
அவனைக் கண்டதும் சிங்காரத்தின் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது.
சிவகாமி அவனிடம் ஓடிச் சென்று தூக்கி, “வசந்தா, உன்னை இங்கே வரக் கூடாதுன்னு சொல்லிட்டுதானே வந்தேன்? ஏண்டா இப்படி சுபகாரியம் பேசும்போது அபசகுனம் புடிச்ச மாதிரி ‘ஐயோ’ன்னு கத்தினே? சனியனே!” என்று திட்டினாள்.
“அம்மா, தேள்… தேள்.” வசந்தன் காலைப் பிடித்துக் கொண்டு துடித்தான். சிவகாமி அவனை அவசரமாக அவன் அறைக்கு அழைத்துக்கொண்டு போய், கட்டுப் போட்டு கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, மறுபடியும் மாப்பிள்ளை வீட்டாருடன் பேச்சில் கலந்துகொள்ளச் சென்றாள்.
‘என்றைக்குமே திட்டாத அம்மா, இன்று தன்னை ‘சனியனே’ என்று திட்டி விட்டார்களே?’ என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதே சமயம் வெளியில் ஹாலில் நிகழும் உரையாடல், அவன் காதுகளில் விழுந்தது
மாப்பிள்ளையின் அம்மா கேட்டாள்.
“யாருங்க அந்தப் பையன்?”
சிங்காரம் முகத்தில் தோன்றிய கோபத்தை மறைத்தபடி சொன்னார். “அவனா? பெத்தவங்க இல்லாத ஒரு அனாதை. ஆனா தூரத்து உறவு. அதான் இங்கே வேலைகாரனா வீட்டோட சாப்புட்டுக்கிட்டு, எங்களுக்கு ஒத்தாசையா இருக்கான்.” என்றார்.
அதற்குமேல் அவன் காதுகளில் எதுவுமே விழவில்லை. அவனால் அந்த வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த உடம்பைத்தான் உணர்ச்சிகள் சாகும்படி அடித்துத் துவைத்து விட்டாரே, உள்ளத்தையுமா இப்படி அடித்து நொறுக்க வேண்டும்?
யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் திடுக்கிட்டான். அவன் உடல் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. அந்த குளிர்ச்சியான சூழ்நிலையிலும் வியர்த்துக் கொட்டியது. அறை வாசலில்… சிங்காரம்.
“டேய் உதவாக்கரை, ராஸ்கல். வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைச்சிட்டியேடா. உன்னை அங்கே வரக்கூடாதுன்னு சொல்லியிருந்தேனே, ஏண்டா வந்தே? சம்பந்தத்தைப் பேசி முடிக்கிற சமயத்துலே ‘ஐயோன்னு’ அபசகுனம் புடிச்ச மாதிரி கத்தித் தொலைச்சே, வந்தவங்க சகுனம் சரியில்லை, ஊருக்குப் போய் பதிலை லெட்டர்ல எழுதறோம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. உன்னை…”
ஆக்ரோஷமாக அவனை நெருங்கி, “இனிமே உனக்கு இந்த வீட்ல இடமில்லை. போ! எங்கேயாவது போய்த் தொலை. என் கண் முன்னே இருக்காதே.” என்று சொல்லி அவனை இழுத்துச் சென்று வாசலுக்கு வெளியே தள்ளி, கதவை அறைந்து சாத்தி விட்டார்.
உள்ளே சிவகாமி அவனுக்காக வாதாடுவதும், கெஞ்சுவதும், அவர் எல்லோரையும் எச்சரிப்பதும் தெளிவாகக் கேட்டது.
உடம்பெல்லாம் வலி. உள்ளமெல்லாம் குருதியில் நனைந்து விட்ட மாதிரி வலி.
நான்கறிவு படைத்த வண்டுகள் கூட, பூக்களுக்கு மகரந்தத்தைச் சுமந்து சென்று உதவுகிறது. ஆனால் அதற்குப் பிரதிபலனாக தேனை எடுத்துக் கொள்ளுகிறது. நீரைச் சுமந்து வந்து மண்ணில் மழையாகப் பொழியும் கார்மேகங்கள், பகலில் சூரியன், இரவில் சந்திரன், மலைகளில் பிறந்து நிலத்தில் ஓடி கடலில் சேரும் நதிகள், இவை அனைத்தும் பிரதிபலன் பாராமல் மண்ணுலக ஜீவராசிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுகின்றன. ஆனால் ஆறறிவு படைத்த என்னால் யாருக்கு என்ன பயன்? நான் ஒரு உதவாக்கரைதான்!
‘நான் கூடப்பிறந்த அக்காவைப் பெண் பார்க்க வந்தவர்களின் சம்மதத்தைத் தரவிடாமல் நடந்துக்கொண்ட உதவாக்கரை! பெற்ற தாயின் மனம் மகிழ எதுவுமே செய்யாதவன்!’… போன்ற எண்ணங்கள் பல்வேறு ஈட்டிகளாகப் பாய்ந்து அவன் இதயத்துக்குள் பாரத்தை ஏற்றின. மெள்ள எழுந்து வீட்டை விட்டு விதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
எழிலும், எண்ணங்களும் எப்படி இருந்தாலும், காலதேவன் சட்டை செய்யாமல் சென்றுக்கொண்டே இருப்பதைப்போல, எத்தனை எத்தனையோ வகையான மனிதர்களைச் சுமந்தபடி சென்று கொண்டிருந்தது தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி.
ரயில் பெட்டி கதவின் பக்கத்தில் இருந்த ஜன்னல் ஓர ஒற்றை இருக்கையில் தூக்கத்தைத் துறந்து வெளியே பார்த்தப்படி உட்கார்ந்திருந்தான் வசந்தன்.
அவனுக்குப் பக்கத்தில் இருந்த இரண்டு நீளமான இருக்கைகளின் இரண்டு குடும்பங்கள் இருந்தன. அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். ஒரு இரண்டு வயது சிறுவன் தன் தாயின் பக்கத்தில் படுத்திருந்தான்.
மணி ஐந்தரைதான் இருக்கும். பொழுது புலரத்தொடங்கி வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது. ரயில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்று அப்போதுதான் புறப்பட்டு மெள்ளள நகரத் தொடங்கியிருந்தது.
கண் விழித்த சிறுவன் தாயை அசைத்து “அம்மா, உச்சா!” என்று சொல்லி எழுப்பினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள், கண் விழிக்கவில்லை. சிறுவன் கீழே இறங்கி கழிப்பறையை நோக்கி மெள்ள தள்ளாட்டத்துடன் நடக்க ஆரம்பித்தான்.
அவன் போவதைக் கவனித்தபடி இருந்தான் வசந்தன்.
சிறுவன் கழிப்பறையின் கதவைத் தள்ளினான். கதவின் கொக்கி போடப்பட்டிருந்ததால் திறக்கவில்லை. கதவின் தாழ்பாளும் அவனுக்கு எட்டவில்லை.
பார்த்துக்கொண்டிருந்த வசந்தன், கழிப்பறைக் கதவைத் திறந்து உதவ இருக்கையில் இருந்து எழுந்தான்.
அதற்குள் சிறுவன் திறந்திருந்த கதவருகே போய் நின்று சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான். ரயிலின் ஆட்டத்தில் சிறுவன் தடுமாறி விழுவதைக் கண்டு திடுக்கிட்டு, “தம்பி!” என்று அலறியபடி அவனைப் பிடித்த வசந்தன், அந்தச் சிறுவனோடு ரயில் பெட்டியில் இருந்து கீழே விழுந்தான்.
அலறல் சத்தம் பேட்டு விழித்துப்பார்த்த பயணிகள், சிறுவனை பிடித்தபடி உருளும் வசந்தனைப் பார்த்து அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தனர்.
‘கிரீச்… கிரீச்’ என்ற சத்தத்துடன் ரயில் நின்றது.
ரயில் பெட்டிகளில் இருந்து சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், கார்டு, மற்றும் மக்களும் இறங்கி வசந்தனை நோக்கி ஓடிச் சென்றனர்.
வசந்தன் பலத்த காயங்களுடன் முகமெல்லாம் ரத்தம் வழிய, கைகால் சதைகள் கிழிந்து கிடந்தான். ஆனால் அவன் இறுகிய கைகளுக்குள் சிறுவன் காயங்கள் எதுவும் இல்லாமல் பத்திரமாக இருந்தான்.
சிறுவனின் தாய் வசந்தனின் கைகளில் இருந்து சிறுவனை வாரியெடுத்து, கண்ணீர் மல்க அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.
“தம்பி, நீ எந்த புண்ணியவதி பெத்த புள்ளையோ, உன் உசிரைப் பத்தி கொஞ்சமும் கவலைப்படாம, என் புள்ளையை காப்பாத்தியிருக்கியே?”
வசந்தனின் செவிகளில் விழுந்த அந்தத் தாயின் வார்த்தைகள் அவனுக்கு அமுதமாக இனித்தது. ‘உதவாக்கரை’ என்று அன்றாடம் அர்ச்சனை செய்த அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டுப் புண்ணாகிப்போன அவன் இதயத்திற்கு, அந்த வார்த்தைகள் அருமருந்தாக இருந்தது.
உயிர் போகும் நிலையிலும் ஒரு சிறுவனைக் காப்பாற்றியதன் மூலம் தான் ஒரு உதவாக்கரை இல்லை என்று நிரூபித்த மகிழ்ச்சியுடன் கண்களை மூடினான் வசந்தன்.
வசந்தனின் வீரச்செயலைப் பாராட்டி, முதலமைச்சர் வசந்தனின் பெற்றோரை நேரில் அழைத்துப் பாராட்டி விருதினையும், இழப்பீட்டுக் காசோலையையும் வழங்கினார். உதவாக்கரை என்று கூறி உதாசீனப்படுத்திய தன் மகன், தந்தைக்காற்றும் நன்றியென அவையத்தில் முன் நிற்கச் செய்ததை எண்ணித் தலைகுனிந்து நின்றார் சிங்காரம். ஈன்ற பொழுது கிடைத்த மகிழ்ச்சியை விட தன் மகனை இழந்தத் துன்பத்தின் மிகுதியில் கண்ணீர் சிந்தி நின்றாள் சிவகாமி.
– கதைப் படிக்கலாம் – 93
இதையும் படியுங்கள் : மனம் மாறிய திருநாள்